இறந்துபோன வாடிக்கையாளர் வங்கி கணக்கிலிருந்து ரூ.1 கோடி மாயம்-விசாரணையில் வெளிவந்த மர்மம்

இறந்துபோன வாடிக்கையாளர் வங்கி கணக்கிலிருந்து ரூ.1 கோடி மாயம்-விசாரணையில் வெளிவந்த மர்மம்
இறந்துபோன வாடிக்கையாளர் வங்கி கணக்கிலிருந்து ரூ.1 கோடி மாயம்-விசாரணையில் வெளிவந்த மர்மம்

இறந்த வாடிக்கையாளரின் வங்கிக்கணக்கின் KYCயை புதுப்பித்து அவரது கணக்கில் இருந்து ₹1.29 கோடியை திருடிய வங்கி ஊழியர் மற்றும் அவரது கூட்டாளி ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தாவைச் சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவரின் வங்கிக் கணக்கில் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோரேகான் கிளையில் இருந்து சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது வங்கிக்கணக்கில் KYC விவரங்கள் மாற்றப்பட்டு வங்கிக்கணக்கில் இருந்த பணம் வெவ்வேறு வங்கிக்கிளைகளில் இருந்த 10 கணக்குகளுக்கு உடனடியாக மாற்றப்பட்டுள்ளது. இதை கவனித்த அந்த வங்கியின் விஜிலென்ஸ் துறை அதிகாரி இந்த பரிவர்த்தனையில் ஏதோ மர்மம் இருப்பதை உணர்ந்துள்ளார். சம்பந்தப்பட்ட அந்த வங்கிக்கணக்கு பல மாதங்களாக செயல்படாமல் இருந்து வந்ததையும் கண்டறிந்துள்ளார். தாமதிக்காமல் உடனடியாக சைபர் கிரைம் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார்.

காவல்துறை விசாரணையை துவங்கியதும் சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் இறந்து பல மாதங்கள் ஆகியுள்ள உண்மை தெரியவந்துள்ளது. இறந்துபோன ஹிரேந்திர குமாரின் ஆதார் மற்றும் பான் கார்டுகளின் நகல்களுடன் KYCஐ புதுப்பிப்பதற்கான விண்ணப்பம் கோரேகான் வங்கி கிளையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பின்னர் அவரது மொபைல் எண்ணை மாற்றுவதற்கும், நெட் பேங்கிங்கை அணுகுவதற்கும் விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது. வங்கிக் கிளையின் சிசிடிவிக் காட்சிகளை ஆய்வு செய்த போது, அதே வங்கியில் பணிபுரிந்த தூய்மைப் பணியாளர் தில்ஷாத் கான் என்பவர் இந்த விண்ணப்பங்களை சமர்பித்ததும் வங்கியின் மற்ற ஊழியர்களின் ஐடி, பாஸ்வேர்டை பயன்படுத்தி KYC விவரங்களை மாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன்பின் இறந்துபோனவர் வங்கிக் கண்க்கில் இருந்த ரூ,1.29 கோடி ரூபாயை வெவ்வேறு வங்கிக் கிளைகளில் 10 கணக்குகளுக்கு மாற்றியுள்ளதும் தெரியவந்துள்ளது. பணம் மாற்றப்பட்ட கணக்குகளை முடக்கி, கணக்கு வைத்திருப்பவர்களின் விவரங்களை அளிக்குமாறு காவல்துறை கேட்டுள்ளது. வங்கியின் தூய்மைப் பணியாளர் மற்றும் அவரது கூட்டாளி ஒருவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தற்போது மாயமாகியுள்ள அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கொல்கத்தாவில் இறந்த வாடிக்கையாளரைப் பற்றி தூய்மைப் பணியாளர் எப்படி அறிந்தார்? மற்றும் அவரது கணக்கில் ரூ.1.29 கோடி பணம் இருப்பதையும் எப்படி அறிந்தார்? என்ற கேள்விகளுக்கு விடைதேடும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com