\
One billion people at risk due to a 1-degree rise in temperature in the Himalayan region
model imageai

1 டிகிரி அதிகரித்த வெப்பநிலை.. மாபெரும் பிரச்னையில் இந்தியா.. 100 கோடி மக்களுக்கு எச்சரிக்கை!

இமயமலைப் பகுதியில் 1 டிகிரி அதிகரித்த வெப்பநிலை காரணமாக 100 கோடி மக்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Published on

சமீபத்திய ஆண்டுகளில் காலநிலை மாற்றத்தால் பல்வேறு இயற்கை மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால் இயற்கையில் கணிக்கமுடியாத மாற்றங்கள் ஏற்பட்டு வருவது பல்வேறு கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வகையில், இமயமலையில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பு இந்தியாவின் கோடிக்கணக்கான மக்களை நேரடியாகப் பாதிக்கவுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். உலகிலேயே அதிக மக்கள் வசிக்கும் பகுதிகளாக கங்கைச் சமவெளியும், சிந்துச் சமவெளிப் பகுதிகளும் உள்ளன. இமயமலையில் உருவாகும் சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா மற்றும் அதன் துணை ஆறுகள் பாயும் இந்தப் பகுதி உலகின் மிக வளமான பகுதியாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இந்த ஆறுகள் பாயும் பகுதிகளில் மட்டும் சுமார் 100 கோடிப் பேர் வசிப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது. உலகளவில் அதிக மக்கள்தொகை நெருக்கம் கொண்ட பகுதிகளான இந்தப் பகுதி மக்களின் வாழ்வு இந்த ஆறுகளை நம்பியே உள்ளது. இந்த நிலையில், காரக்பூர் ஐஐடி (IIT Kharagpur) கல்வி நிறுவனத்தின் கடல், நதி, வளிமண்டலம் மற்றும் நில அறிவியல் மையத்தைச் (CORAL) சேர்ந்த பேராசிரியர்கள் வெளியிட்டுள்ள ஆய்வில், இமயமலை பகுதிகளான குல்மார்க், பகல்காம் போன்ற உயரமான மலைப்பகுதிகள் மிக வேகமாக வெப்பமடைந்து வருகின்றன என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் இப்பகுதிகள் தோராயமாக 1 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமடைந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இமயமலைப் பகுதியில் பனி வேகமாக உருகி வருவதாகவும், இந்தத் தொடர் பனி உருகுதல் நிகழ்வானது, எதிர்காலத்தில் ஆசியாவின் முக்கிய நதிகளின் நீர்வரத்தைப் பாதித்து, அதை நம்பியிருக்கும் கோடிக்கணக்கான மக்களின் குடிநீர் மற்றும் வாழ்வாதாரப் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com