‘கேக் வேண்டாம் வெங்காய பை கொடுங்க’ - சோனியா காந்தி பிறந்தநாள் விழாவில் விநோதம்
புதுச்சேரியில் சோனியா காந்தி பிறந்தநாளில் வழங்கப்பட்ட வெங்காயத்தை வாங்குவதற்காக காங். கட்சியினரிடையே லேசான தள்ளுமுள்ளு நடந்தது.
காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியின் பிறந்தநாளை புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியினர் கோலாகலமாக கொண்டாடினர். முதலமைச்சர் நாராயணசாமி, காங்கிரஸ் கட்சிதலைவர் நமச்சிவாயம் உள்ளிட்ட அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் சேர்ந்து பிரசித்தி பெற்ற மணக்குளர் விநாயகர் ஆலயத்தில் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர்.
பின்னர் மாநில காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டனர். அங்கு தொண்டர்கள் முன்னிலையில் கேக் வெட்டி சோனியாவின் பிறந்த நாளை கொண்டாடிய முதல்வர் நாராயணசாமி, மகளிரணியை சேர்ந்த 100க்கும் அதிகமான தொண்டர்களுக்கு வெங்காயம் அடங்கிய பரிசுப் பையை வழங்கினார்.
பிறந்த நாள் கேக்கை வாங்க ஆர்வம் காட்டியதை விட, வெங்காயத்தை வாங்க அதிகளவு மகளிரணி தொண்டர்கள் ஆர்வம் காட்டினர். ஆகவே அங்கு லேசான போட்டா போட்டி ஏற்பட்டது. சமீப காலமாக வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருப்பதால் அதனை சுட்டிக் காட்டும் நோக்கில் இவர்களின் நடவடிக்கை இருந்ததை பொதுமக்கள் ஆர்வமுடன் கூடி நின்று வேடிக்கை பார்த்து சென்றனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நாராயணசாமி நாட்டில் உயர்ந்து வரும் வெங்காய விலை உயர்வை மத்திய அரசு கண்டுகொள்ளாதது வேதனை அளிக்கின்றது என்று தெரிவித்தார்.