71 வயது முதியவரை தரதரவென ஸ்கூட்டியில் இழுத்துச்சென்ற இளைஞர் - பதறவைக்கும் வீடியோ

71 வயது முதியவரை தரதரவென ஸ்கூட்டியில் இழுத்துச்சென்ற இளைஞர் - பதறவைக்கும் வீடியோ
71 வயது முதியவரை தரதரவென ஸ்கூட்டியில் இழுத்துச்சென்ற இளைஞர் - பதறவைக்கும் வீடியோ

பெங்களூருவில் தவறானப் பாதையில் வந்து தன் கார் மீது மோதிய இளைஞரைப் பிடிக்க முயன்றுள்ளார் 71 வயது முதியவரொருவர். ஸ்கூட்டியின் பின்புறத்தை அந்த முதியவர் பிடித்தபோது, அவசரமாக அங்கிருந்து தப்பிக்க முயன்ற அந்த இளைஞர், சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு முதியவர் சாலையில் உரசும்படி தரதரவென இழுத்துச்சென்ற சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு விஜயநகர் மகடி சாலையில், தவறானப் பாதையில் ஸ்கூட்டரில் வந்த இளைஞர் ஒருவர், முதியவர் ஓட்டிவந்த பொலீரோ காரின் மீது மோதியுள்ளார். இதையடுத்து காரில் இருந்து இறங்கிய முதியவர், அந்த இளைஞரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் இதனை எல்லாம் பொருட்படுத்தாமல் தவறானப் பாதையில் வந்த அந்த இளைஞர், அங்கிருந்து உடனடியாக தப்பிக்கும் வகையில் தனது ஸ்கூட்டரை எடுத்துக்கொண்டு ஓட முயற்சித்துள்ளார். இதனைப் பார்த்த அந்த முதியவர், சிறிதும் தாமதிக்காமல், ஸ்கூட்டரின் பின்புறம் இருந்த கைப்பிடியை கெட்டியாக பிடித்துக்கொண்டார்.

வேகமாகச் சென்றால் கை நழுவி முதியவர் கைப்பிடியை விட்டுவிடுவார் என்று நினைத்து, இளைஞர் ஸ்கூட்டியை வேகமாக ஓட்டியுள்ளார். இதில் இளைஞர் எதிர்பார்த மாதிரி இல்லாமல், முதியவர் ஸ்கூட்டியின் கைப்பிடியை கெட்டியாக பிடித்துக்கொண்டுள்ளார். இதனால் சுமார் 1 கி.மீ. தூரம் முதியவரை சாலையில் தரதரவென இழுத்துக்கொண்டே இளைஞர் சென்றுள்ளார். இதனைப் பின்னால் வந்தவர்கள் வீடியோ எடுத்துக்கொண்டே இளைஞரை பிடிக்க முயற்சி செய்துள்ளனர். கடைசியாக அங்கு சென்ற ஆட்டோ, கார் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்த நபர்கள், இளைஞரின் ஸ்கூட்டியை வழிமறித்து நின்றதும்தான், ஸ்கூட்டியில் இருந்து இளைஞர் இறங்கியுள்ளார்.

இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்டுள்ளது. இதையடுத்து இளைஞருக்கு கடும் கண்டனங்கள் குவிந்து வருகின்றன. ராகேஷ் பிரகாஷ் என்பவர் இந்த வீடியோவை பகிர்ந்து பெங்களூரு போக்குவரத்து காவல்துறையை டேக் செய்திருந்தார். இதனையடுத்து, பிஎஸ் கோவிந்தராஜ் நகர் போலீசார் அந்த இளைஞரைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட இளைஞருக்கு 25 வயது என்பதும், அவருடைய பெயர் சாஹீல் என்பதும் தெரியவந்துள்ளது.

சாலையில் இழுத்துச்செல்லப்பட்ட 71 வயது முதியவரின் பெயர் முட்டப்பா என்பதும் தெரியவந்துள்ளது. சிராய்ப்பு காயங்களுடன் தப்பிய முதியவர் முட்டப்பாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சமீப காலங்களாகவே டெல்லி, சண்டிகர் உள்பட பல மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருவது பலரையும் அச்சத்திற்குள்ளாக்கியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com