“விடுமுறை நாளில் யாரும் பேக்ஸ் இயந்திரம் அருகே இருக்கமாட்டார்கள்”- காஷ்மீர் ஆளுநர் விளக்கம்
விடுமுறை தினத்தில் யாரும் பேக்ஸ் இயந்திரம் அருகே உட்கார்ந்து கொண்டு இருக்கமாட்டார்கள் என ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் பாஜக இணைந்து ஆட்சி அமைத்தது. முஃப்தி முகமது சையது முதலமைச்சராகவும், நிர்மல் குமார் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றனர். முஃப்தி முகமது உடல் நலக் குறைவால் உயிரிழந்ததை அடுத்து அவரது மகள் மெஹபூபா முஃப்தி முதலமைச்சராக 2016, ஏப்ரல் மாதம் பொறுப்பேற்றார். இதனையடுத்து, பிடிபி, பாஜக இடையே தொடர்ச்சியாக கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
அதனையடுத்து, இந்த ஆண்டு ஜூன் மாதம் பாஜக தனது ஆதரவை விலக்கி கொள்வதாக அறிவித்ததால், ஜம்மு காஷ்மீரில் கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது. மெஹபூபாவின் அரசும் கவிழ்ந்தது. பின்னர், யாரும் ஆட்சி அமைக்க முன்வராததால் ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இருப்பினும், காஷ்மீர் சட்டசபை கலைக்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில் ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநர் சத்யபால் மாலிக்கிற்கு மெஹபூபா கடிதம் எழுதினார். அதில் காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாடு கட்சிகள் எங்களுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளதாக ஊடகங்கள் மூலம் நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள் என அந்த கடிதத்தில் மெஹபூபா குறிப்பிட்டிருந்தார். இந்த கடிதத்தை தனது ட்விட்டரில் பதிவிட்ட மெஹபூபா முஃப்தி, “ இதனை ராஜ்பவனுக்கு அனுப்ப முயற்சி செய்தேன். இருப்பினும் ராஜ்பவன் அலுவலக ஃபேக்ஸ் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆளுநரை தொலைபேசி வழியாக தொடர்பு கொள்ள முயற்சித்தேன். அங்கேயும் தொடர்பு கொள்ள முடியவில்லை” என குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே காஷ்மீர் சட்டசபையை கலைக்க ஆளுநர் சத்யா பால் மாலிக் உத்தரவிட்டார். மெஹபூபா ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில் சட்டசபையை கலைக்க ஆளுநர் உத்தரவிட்டது சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இவ்விவகாரத்தில் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் விளக்கம் அளித்துள்ளார். அதில், “ மிலாடி நபி என்பதால் நேற்று ஆளுநர் மாளிகை விடுமுறை. விடுமுறை தினத்தில் யாரும் பேக்ஸ் இயந்திரம் அருகே இருந்து கொண்டே இருக்கமாட்டார்கள். முஃப்தி வேறு ஒரு நாளில் என்னை அணுகியிருக்கலாம்” என தெரிவித்துள்ளார்.