மாட்டிறைச்சி வைத்திருந்ததாக முதியவர் கொடூர கொலை! இன்னும் எத்தனை பேர்? இது அசிங்கமில்லையா?

மாட்டிறைச்சி வைத்திருந்ததாக முதியவர் கொடூர கொலை! இன்னும் எத்தனை பேர்? இது அசிங்கமில்லையா?
மாட்டிறைச்சி வைத்திருந்ததாக முதியவர் கொடூர கொலை! இன்னும் எத்தனை பேர்? இது அசிங்கமில்லையா?

பீகார் மாநிலத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் எத்தனை நாள் இந்த அவமானம்!

மாட்டிறைச்சி வைத்திருந்ததாக அடித்துக் கொல்லப்படும் சம்பவங்கள் இந்தியாவில் பல மாநிலங்களில் அவ்வவ்போது அரங்கேறி வருகின்றன. மிகவும் அவமானகரமான இந்த கொடூர தாக்குதல் சம்பவங்களை பல மாநில அரசுகளும் இன்னும் கட்டுக்குள் கொண்டு வராமல் இருக்கின்றன என்பது வேதனையான விஷயம். உணவு என்பது ஒருவரது தனிப்பட்ட விஷயம். அப்படியே அதிருப்தி இருந்தாலும் ஒரு நபர் மீது தாக்குதல் நடத்த மற்றவர்களுக்கு  என்ன உரிமை இருக்கிறது. இது என்ன வகையான மனநிலையை உருவாக்கி வைத்துள்ளது என்பதை நினைத்தாலே அதிர்ச்சியாக உள்ளது. இதுபோன்ற கும்பல் தாக்குதல்களை அனுமதிப்பது மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும். நம்முடன் வாழும் சக மனிதரை எப்படி உணவின் பெயரில் கொடூரமாக தாக்க முடியும். அதுவும் உயிரே போகும் அளவிற்கு. அப்படியான ஒரு கொடூரச் சம்பவம்தான் பீகார் மாநிலத்தில் மீண்டும் அரங்கேறியுள்ளது.

பீகாரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

பீகார் மாநிலம், சரண் மாவட்டத்தில் உள்ள ஹசன்புர் கிராமத்தைச் சேர்ந்தவர் நசீம் குரேஷி. 56 வயது முதியவரான இவர், கடந்த 7ஆம் தேதி தனது உறவினர் பேரோஷ் குரேஷி என்பவருடன் சேர்ந்து ஜோகியா கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அப்போது இவர்களை வழிமறித்த கும்பல் ஒன்று, ”நீங்கள் மாட்டிறைச்சி வைத்துள்ளீர்கள்” எனக் கூறி அந்த கும்பல் உருட்டுக்கட்டையால் தாக்கியதாகவும், இதில், பேரோஷ் குரேஷி அந்த கும்பலிடம் இருந்து தப்பித்து ஓடியதாகவும் தெரிகிறது.

ரத்த வெள்ளத்தில் முதியவர் - சிகிச்சை பலனின்றி பலி

இதையடுத்து முதியவரைத் தாக்கிய அந்த கும்பல், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். பின்னர் போலீசார் ரத்தவெள்ளத்திலிருந்த முதியவரைச் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து முதியவரைத் தாக்கிய சுஹில் சிங், ரவி ஷா, உஜ்வால் சர்மா ஆகிய மூன்று பேரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மாட்டிறைச்சி வைத்திருக்கவே இல்லை - விசாரணையில் தகவல்

ஆனால், போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் மாட்டிறைச்சி கொண்டுசெல்லவில்லை என தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீசார், ”இந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடையவர்களைத் தேடி வருகிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி முதியவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய தாக்குதல் சம்பவங்களை அந்தந்த மாநில அரசுகளும், மத்திய அரசும் இணைந்து தடுத்து நிறுத்த வேண்டும். இந்தியா போன்ற பெரிய ஜனநாயக நாட்டில் இதுபோன்று நடப்பது ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒன்று ஆகும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com