கர்நாடக தேர்தலுக்காக பெட்ரோல், டீசல் விலைக்கு செக்..!

கர்நாடக தேர்தலுக்காக பெட்ரோல், டீசல் விலைக்கு செக்..!
கர்நாடக தேர்தலுக்காக பெட்ரோல், டீசல் விலைக்கு செக்..!

பெட்ரோல், டீசல் விலை ஏப்ரல் 24ம் தேதிக்கு பிறகு மாற்றம் செய்யப்படாமல் தொடர்ந்து வருகின்றது.

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைக்க மத்திய நிதி அமைச்சகம் மறுத்துவிட்டது. இதனால், 55 மாதங்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டது. இதனிடையே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 2 டாலர் உயர்ந்த போதும், பெட்ரோல், டீசல் விலை கடந்த ஒரு வாரமாக உயர்த்தப்படாமல் உள்ளது. அதேவேளையில் பெட்ரோல், டீசல் விலையில் ஒரு வாரத்திற்கும் மேல் எவ்வித மாற்றமும் இல்லாமல் தொடர்கிறது.

தற்போதையை பெட்ரோல் விலை நிலவரம்:-

மும்பை - 82.48
ஐதராபாத் - 79.04
சென்னை - 77.43
கொல்கத்தா - 77.32
டெல்லி  - 74.63

கர்நாடக தேர்தல் காரணமாகவே பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை குறித்து தங்களால் எவ்வித பதிலும் அளிக்க முடியாது, அதனை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தான் முடிவு செய்யும் என்று மத்திய பெட்ரோலிய துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த விலை மாற்றமின்மை குறித்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் எவ்வித விளக்கமும் அளிக்கப்படவில்லை. 

பாஜக தலைமையிலான அரசு 2014 முதல் 2016-ம் ஆண்டு வரை 9 முறை கலால் வரியை உயர்த்தியுள்ளது. அதனால், பெட்ரோல் விலை ரூ11.77, டீசல் விலை ரூ.13.47ம் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்த போது, பெட்ரோல், டீசல் விலை பெரிய அளவில் குறைக்கப்படவில்லை. இதன் மூலம் பெட்ரோல், டீசல் வழியாக 2014-15 ரூ99,000 கோடியாக இருந்த வரி வருவாய், 2016-17 இல் ரூ2,42,000 கோடியாக உயர்ந்தது. 

இதனிடையே, பெட்ரோல், டீசல் விலை நிர்ணயத்தில் வெளிப்படைத்தன்மையை பின்பற்ற இந்திய சந்தைப்போட்டி ஆணையத்திற்கு உத்தரவிடக்கோரி வழக்கறிஞர் மனோகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். “கச்சா எண்ணெய் விலை 2014-இல் ஒரு பேரல் 112 டாலராக விற்ற போதும் பெட்ரோல் ரூ72.க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது கச்சா எண்ணெய் பேரலுக்கு 62 டாலராக உள்ள நிலையிலும் பெட்ரோல் விலை ரூ75க்கு விற்பனை செய்யப்படுகிறது” என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணக்கு வரவுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com