இனி, Internet வேண்டாம்.. UPI-இல் பணம் செலுத்தும் புது வசதி.. விரைவில் அறிமுகம்!
இந்தியாவில் விரைவில் இணைய இணைப்பு இல்லாமலேயே யு.பி.ஐ. பணம் செலுத்தும் வசதி செய்யப்பட இருக்கிறது. தொலைதூர பகுதிகள், விமானங்கள் மற்றும் சுரங்கப்பாதை மெட்ரோக்களில் பணம் செலுத்துவதற்கு இது உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இன்றைய உலகில் மொபைல் மட்டும் இருந்தால், போதும். உலகத்தில் உள்ள அனைத்தையும் நிமிடத்தில் பெற்றுவிடலாம். அதிலும் குறிப்பாக, ஒருகாலத்தில் பணத்தைக் கொடுத்து பொருட்கள் வாங்கிய நிலையில், இன்று, அந்தப் பணத்தைக்கூட மொபைல் மூலம் செலுத்தும் வசதி வந்துவிட்டதால், பயனர்கள் பலரும் யுபிஐ எனப் பணப் பரிவர்த்தனையையே மேற்கொள்கின்றனர். எனினும், இதற்கு நெட்வொர்க் தேவைப்படுகிறது. இந்த நிலையில், பயனர்கள் இண்டர்நெட் இல்லாமலேயே பரிவர்த்தனைகளை மேற்கொள்ள அனுமதிக்கும் வசதியை மத்திய அரசு அறிமுகப்படுத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.
வாடிக்கையாளரின் ஸ்மார்ட்போனிலோ அல்லது வணிகரின் PoS டெர்மினலிலோ இணைய இணைப்பு இல்லாமலேயே பணம் செலுத்தும் வசதியை இந்தியா விரைவில் செயல்படுத்தவுள்ளதாக பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது. ஆஃப்லைன் பணப்பரிவர்த்தனைகளை செயல்படுத்துவதற்காக, இணக்கமான PoS டெர்மினல்களுக்கு இந்த ஆண்டின் பிற்பகுதியில் தேசிய பணப்பரிவர்த்தனைக் கழகம் (NPCI) சான்றளிக்க தொடங்கும் என்று கூறப்படுகிறது. இது, ஆஃப்லைன் UPI அம்சம் NPCI தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் என்று கூறப்படுகிறது.
இது பயன்பாட்டிற்கு வந்தவுடன், பயனர்கள் தங்களின் என்.எஃப்.சி. வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை ஆதரிக்கப்படும் கட்டண முனையங்களில் தட்டுவதன் மூலம் ஆஃப்லைன் யு.பி.ஐ. மூலம் பணம் செலுத்தலாம். ஆரம்பத்தில், ஒரு பரிவர்த்தனைக்கு ரூ. 2,000 என ஆஃப்லைன் பரிவர்த்தனைகள் வரம்பிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தொலைதூர பகுதிகள், விமானங்கள் மற்றும் சுரங்கப்பாதை மெட்ரோக்களில் பணம் செலுத்துவதற்கு இது உதவியாக இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆஃப்லைன் யு.பி.ஐ. அம்சம், சாதனத்தில் உள்ள யு.பி.ஐ. லைட் வாலட் மூலம் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பயனர்கள் ஆரம்பத்தில், இணைய இணைப்பு இல்லாமலோ அல்லது யு.பி.ஐ. PIN எண்ணை உள்ளிடாமலோ, ஆதரிக்கப்படும் ஆஃப்லைன் PoS டெர்மினல்களில் பணம் செலுத்துவதற்கு, இணையத்துடன் இணைந்திருக்கும்போது வாலட்டில் பணத்தை ஏற்ற வேண்டியிருக்கும். இந்தப் பரிவர்த்தனை யு.பி.ஐ. லைட் இருப்பைப் பயன்படுத்தும். அதாவது, இன்டர்நெட் சேவை இருக்கும்போது 'யு.பி.ஐ. லைட்' கணக்கில் முன்கூட்டியே பணத்தை சேர்க்க வேண்டும். பின், செல்போனை கடையின் பணம் பெறும் கருவிக்கு அருகே காட்டி, இன்டர்நெட் அல்லது ரகசிய எண் இல்லாமல் பணம் செலுத்தலாம்.

