கொரோனாவால் உயிரிழந்தவரின் உடலை அலட்சியமாக வீசி செல்லும் அதிகாரிகள் : அதிர்ச்சி வீடியோ
புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்த நபரின் உடலுக்கு இறுதி சடங்குகூட செய்யாமல் சவக்குழியில் அலட்சியமாக வீசி செல்லும் கொடுமையான காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்த 40 வயது நபர் புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றபோது அங்கு அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து கோபாலன்கடை மயானத்திற்கு அவரது உடலை கொண்டு சென்ற போலீசார், வருவாய் மற்றும் சுகாதாரத் துறையினர் அவரது உடலை சவக்குழியில் வீசி அதன் பிறகு உள்ளே தள்ளியுள்ளனர். இதுகுறித்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இறந்தவர்களுக்கு உறவுகள், நண்பர்கள் இருந்தும் அடக்கம் செய்யவோ இறுதி சடங்கு செய்யவோ யாரும் வரவில்லை என்றும் கூறப்படுகிறது.