கண்ணீர்.. கவலை.. வேதனை! ஒடிசா ரயில் விபத்தில் இறந்தவர்களின் உடல்களை இன்றளவும் தேடும் உறவினர்கள்!

ஒடிசா ரயில் விபத்தில் பலியான உடல்களை, அவர்களுடைய உறவினர்கள் இன்னும் கண்ணீருடனும், கவலையுடனும், வேதனையுடனும் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
உடல்களைத் தேடும் உறவினர்கள்
உடல்களைத் தேடும் உறவினர்கள்ANI

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ஆம் தேதி இரவு 7 மணி அளவில் கோர ரயில் விபத்து ஏற்பட்டு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விபத்தில் மொத்தம் 3 ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 288 பேர் உயிரிழந்ததாகவும், 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த கோர விபத்தில் பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத வகையில் இருந்ததைத் தொடர்ந்து விபத்து நடைபெற்று ஒரு வார காலமாகியும் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் இன்னும் உடல்களை மீட்க போராடி வருகின்றனர்.

பல உடல்களுக்கு உரிமை கோருபவர்கள் இல்லை. சில உடல்களுக்கு பலர் உரிமை கோருகின்றனர். இதனால் சடலங்களை அடையாளம் கண்டு அவர்களது குடும்பத்தினருக்கு விடுவிப்பதில் குழப்பமும், தாமதமும் ஏற்பட்டுள்ளது. ரயில் விபத்தில் பலியான 57 குடும்ப உறுப்பினர்களிடம் டிஎன்ஏ மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த மாதிரிகள் உரிமை கோரப்பட்ட உடல்களுடன் பொருந்துகின்றன. இருப்பினும், உரிமை கோருபவர்கள் இல்லாத 30க்கும் மேற்பட்ட சடலங்கள் இன்னும் உள்ளன.

இந்த நிலையில், புவனேஸ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அடுக்கப்பட்டிருக்கும் உடல்களை அடையாளம் காணும் வகையில் அங்குச் சென்றிருக்கும் உறவினர்கள், குடும்பத்தினர்கள் அவற்றை வெறித்துப் பார்த்தவண்ணம் உள்ளனர். அவர்களிடம் விரக்தியும் நம்பிக்கையின்மையும் காணப்படுகிறது. அவர்களுடைய முகங்களில் பெரும்பாலும் சோகமே எழுதப்பட்டதாக இருக்கிறது.

அதிலும் அவர்கள் ஏழைகளாக இருப்பதுதான் கொடூரத்தின் உச்சம். பீகார், மேற்கு வங்காளம் மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களைச் சேர்ந்த ஏழைகள்தான் அங்கு குழுமியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அவர்கள் அனைவரும் தங்களுடைய உறவினர்களைக் கண்ணீருடனும், கவலையுடனும், வேதனையுடனும் தேடிக் கொண்டிருக்கின்றனர். அது எவ்வளவு காலம் எடுக்கும் என்று தெரியவில்லை. ஆனாலும் அவர்களுடைய தேடுதல் படலம் விரக்தியுடன் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

இதில் பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள மணியாரி கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான நரேஷ் யாதவ், கடந்த ஜூன் 3ஆம் தேதி முதல் தனது மூத்த மகனான அகிலேஷைத் தேடி வருகிறார். இவரைப் போல், இன்னும் பலர் தங்களது உறவுகளைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். அதில் கடந்த 7ஆம் தேதியுடன் பீகாரைச் சேர்ந்த 88 பேரையும் மேற்கு வங்கத்தில் 31 பேரையும் காண முடியவில்லை என அங்கு புலம்பல்கள் கேட்பதாகக் கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க, மறுபுறம் உடல்களை ஒப்படைக்கும் பொறுப்பில் உள்ளவர்களும் பதற்றத்தில் உள்ளனர். ஒரே மாதிரியான உடல்களை பலர் உரிமை கொண்டாடுவதால் இது தங்களுக்கு பெரும் சவாலாக உள்ளது என்று பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com