ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு !
இப்போதுள்ள ஊரடங்கு ஒடிசா மாநிலத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 25 ஆம் தேதி ஆம் தேதி முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஆனால் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம் அதிகரித்துச் செல்வதால், பல மாநில அரசுகள் பிரதமர் மோடியிடம் மக்களின் நலம் காக்க ஊரடங்கு தேதியை நீட்டிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். இந்நிலையில், ஒடிசா மாநில அரசு ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.
இதுவரை ஒடிசாவில் 42 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒடிசாவில் கொரோனாவால் பாதிப்பு குறைவு என்றாலும் அம்மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் ஊரடங்கை நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டது. நாட்டிலேயே முதல் மாநிலமாக ஒடிசாதான் ஊரடங்கு உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், அம்மாநிலத்தில் ஜூன் 17 ஆம் தேதி வரை கல்வி நிலையங்களை மூடவும் முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவிட்டுள்ளார்.