ஒடிசா முதல்வர் போட்டியிடும் தொகுதியில் “பேய் கிராமம்” - திகிலை கிளப்பும் மக்கள்
ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் போட்டியிடும் தொகுதியில் ஒரு கிராமம் திகிலை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.
ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் போட்டியிடும் கஞ்சம் மாவட்டம் ஹின்ஜிலி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட இந்த கிராமம், பேய் கிராமம் என்றே அப்பகுதி மக்களால் அறியப்படுகிறது. பிரதான சாலை முதல் தெருக்கள் வரை எப்போதும் வெறிச்சோடி காட்சியளிக்கின்றன. பெரும்பாலான வீடுகள் பூட்டப்பட்டுள்ளன. அங்கு மனிதர்களின் வசிப்பதற்கான அறிகுறிகள் இல்லை. வேலைவாய்ப்பு தேடி பிற மாநிலங்களுக்கு அப்பகுதி மக்கள் குடிபெயர்ந்து வருவதே இந்நிலைக்குக் காரணம் என அப்பகுதியை விட்டு வெளியேறாத பிற கிராம வாசிகள் தெரிவிக்கின்றனர்.
கஞ்சம் மாவட்டத்திலிருந்து ஆறு லட்சத்திற்கும் அதிகமானோர் சென்னை, மும்பை, சூரத் மற்றும் டெல்லி போன்ற பகுதிகளுக்கு பணிக்குச் சென்றுவிட்டனர். மக்களவைத் தேர்தலின் இரண்டாம் கட்டத்தில் ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வேறு மாநிலங்களுக்கு குடிபெயர்ந்தவர்களில் வெகு சிலரே வாக்களிக்க திரும்புவார்கள் என சாரு கிராமத்தில் வசிக்கும் எஞ்சியுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.
பிற மாநிலங்களுக்கு குடியேறியவர்களின் வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்யக்கூடாது என கடந்த 2014ஆம் ஆண்டில், ஒடிசா அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அடையாளம் காண தொழிலாளர் நலத்துறை முடிவு செய்தது. ஆனால் மாவட்ட நிர்வாகத்தால் அந்த தகவலையும் முழுமையாக சேகரிக்க முடியாத நிலையே இன்று வரை நீடிக்கிறது. அங்கு போட்டியிடும் நவீன் பட்நாயக்கின பிஜு ஜனதாதளம், காங்கிரஸ், பாஜக கட்சிகள், வேலைவாய்ப்பு ஏற்படுத்தித்தருவதாக தங்களது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்து பரப்புரை மேற்கொள்கின்றன. இந்த வாக்குறுதி நடைமுறைக்கு வந்தால் மட்டுமே பேய் கிராமம் என்ற பெயரை சாரு கிராமம் மாற்றிக்கொள்ள முடியும்.