காவலரால் சுடப்பட்ட ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் உயிரிழப்பு

காவலரால் சுடப்பட்ட ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் உயிரிழப்பு
காவலரால் சுடப்பட்ட ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் உயிரிழப்பு

ஒடிசா சுகாதார அமைச்சரும், பிஜு ஜனதா தளம் (பிஜேடி) தலைவருமான நபா கிஷோர் தாஸ், புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நபா தாஸ் நேற்று காலை ஜார்சுகுடாவில் உள்ள பிரஜராஜ்நகரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றபோது வாகனத்தில் இருந்து வெளியே இறங்கிய சமயம், காவலர் ஒருவரால் பலமுறை மார்பு பகுதியை நோக்கி சுடப்பட்டார். ஏஎஸ்ஐ கோபால் தாஸ் என்ப்வர்தான், அமைச்சர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார் என அறியப்பட்டது. அமைச்சர் மீது ஏஎஸ்ஐ துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான சரியான காரணம் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அவர் காவலில் எடுக்கப்பட்டு அவர்மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தாக்குதலைத் தொடர்ந்து, அமைச்சர் கிஷோர் தாஸ், ஜார்சுகுடா டிஹெச்எச்க்கு கொண்டு செல்லப்பட்டார். மேல் சிகிச்சைக்காக அங்கிருந்து அவர் விமானம் மூலம் புவனேஸ்வரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது உடல்நிலை மோசமடைந்ததால், மருத்துவமனையில் அவருக்கு அவசர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது

தோட்டா ஒன்று அவரது உடலுக்குள் நுழைந்து வெளியேறியதால், இதயம் மற்றும் இடது நுரையீரல் ஆகியவற்றில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும், அதிக ரத்தம் வெளியேறி உள்ளதாகவும் மருத்துவர்களால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அவருக்கு ஐசியூவில் அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், எவ்வளவோ முயற்சி செய்தும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று மருத்துவமனை தெரிவித்தது. டாக்டர் தேபாஷிஷ் நாயக் தலைமையிலான டாக்டர்கள் குழு உடனடியாக அவருக்கு சிகிச்சை அளித்து அறுவை சிகிச்சை செய்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நபா தாஸ் , 2019 தேர்தலில் பிஜேடி சார்பில் வெற்றி பெற்றவர். அதற்கு முன், அவர் காங்கிரஸில் இருந்தார் மற்றும் கட்சியின் செயல் தலைவராக பணியாற்றியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com