ஒடிசா| இசைக்கருவி இசைத்து அமளியில் ஈடுபட்ட எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள்! என்ன காரணம்?
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது என்பதை சுட்டிக்காட்டி ஒடிசா சட்டசபையில், எதிர்கட்சி உறுப்பினர்கள் இசைக்கருவிகளை இசைத்து கடும் அமளியில் ஈடுபட்டனர்.
ஒடிசாவில் பாஜகவை சேர்ந்த மோகன் சரண் மஜி தலைமையிலான ஆட்சி நடைப்பெற்று வருகின்றது. ஒடிசா சட்டசபையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்துவருகிறது. நேற்றைய தினம் (25.3.2025) வழக்கம் போல கூடிய சட்டமன்ற கூட்டத்தில் எதிர்கட்சிகளான பிஜூ ஜனதா தளம், காங்கிரஸ் உறுப்பினர்கள் தனித்தனி கோரிக்கைகளை முன்வைத்து அமளியில் ஈடுபட்டனர்.
குறிப்பாக கடந்த 9 மாதங்களில், அதாவது பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக பதாதைகளை ஏந்தியும், கோஷங்களை எழுப்பியும் எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
இதனால், சட்டசபையில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது. நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர நினைத்த சபாநாயகர் சுராமா பதேய் ஆர்ப்பாட்டக்காரர்களை தங்கள் இருக்கைகளுக்குத் திரும்புமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்தார்.. இருப்பினும் நிலைமை சரியாகவில்லை. தொடர்ந்து இசைக்கருவிகளை சத்தமாக இசைத்தும், கைகளை தட்டியும் எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.
இதனால், 5 முறை சபை ஒத்தி வைக்கப்பட்டதால், 3 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சட்டசபையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாக கூறி ராமச்சந்திர கடாம், சாகர் சரஸ் தாஸ், சத்யஜித் , அசோக் குமார் தாஸ் உள்ளிட்ட 12 காங்கிரஸ் எம்.எல்.எக்கள் 7 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த உத்தரவை சபாநாயகர் வெளியிட்டார்.