ஒடிசா | 187 பணிகளுக்கு 8,000 பேர் போட்டி.. விமான ஓடுபாதையில் தேர்வை நடத்திய அதிகாரிகள்.. #Video
ஒடிசாவில் 187 ஊர்க்காவல் படை பணியிடங்களுக்குத் தேர்வெழுத 8,000 பேர் திரண்டதால் விமான ஓடுபாதையில் தேர்வு நடைபெற்றது
உலகம் முழுவதும் ஏஐயின் வருகையால் பெரும்பாலான ஐடி நிறுவனங்களில் பணி நீக்க நடவடிக்கைகள் தொடருகின்றன. மறுபுறம், நிரந்தர வேலை கிடைக்காமல் இளைஞர்கள் தவிப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இன்னும் சொல்லப்போனால் குறிப்பிட்ட ஒரு சில இடங்களுக்கே ஆயிரக்கணக்கான பேர் போட்டி போடுகின்றனர். அப்படியான ஒரு சம்பவம்தான் ஒடிசாவில் அரங்கேறி உள்ளது. ஒடிசா மாநிலம் சம்பல்பூர் மாவட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் 187 ஊர்க்காவல் படை பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்தப் பதவிக்கான குறைந்தபட்ச தகுதியாக ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி மட்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வேலை கிடைக்காத விரக்தியில் இருக்கும் இளைஞர்கள், அதிலும் பட்டதாரிகள் இளைஞர்கள் வரை இதற்காகப் போட்டியிட்டனர். குறிப்பாக, இந்த வேலைக்காக 10,000 பேர் விண்ணப்பித்ததாகக் கூறப்படும் நிலையில், இதற்கான ஆட்சேர்ப்புத் தேர்வு கடந்த டிசம்பர் 16 அன்று நடைபெற்றது. இத்தேர்வுக்காக 8,000க்கும் மேற்பட்டோர் வந்திருந்தனர்.
பெரும்பாலும் ஆட்சேர்ப்புத் தேர்வுகள், நியமிக்கப்பட்ட தேர்வு மையங்களில் நடத்தப்படும். ஆனால் தேர்வர்களின் எண்ணிக்கையைக் கொண்டு, அவர்கள் இத்தேர்வை தேர்வு மையங்களில் நடத்தவில்லை. மாறாக, ஜமதர்பள்ளி விமான நிலையத்தின் ஓடு பாதையைத் தேர்ந்தெடுத்தனர். இதையடுத்து, அன்று காலை அதிகாலை முதலே இளைஞர்கள் அங்கு குவிய ஆரம்பித்தனர். அங்கு அவர்கள், ஓடுபாதையான தார்ச் சாலையில் அமர்ந்து தேர்வு எழுதினர். வழக்கத்திற்கு மாறாக இந்தச் சூழல் இருந்தபோதிலும், தேர்வு சுமுகமாக நடந்ததாகவும், தேர்வர்கள் ஒழுக்கத்தைக் காட்டியதாகவும், இதனால் அதிகாரிகள் திருப்தி அடைந்ததாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, இந்த 8,000 விண்ணப்பதாரர்களைத் தேர்வு எழுத வைக்க 20 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டதாகவும், அங்கெல்லாம் தற்போது அரையாண்டுத் தேர்வுகள் நடைபெறுவதாலும் கடைசிக்கட்டத்தில் இத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. என்றாலும், இது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

