ஒடிசாவில் நாளை முதல் "ஆன்லைன்" மூலம் மது விற்பனை !
ஒடிசா மாநிலத்தில் நாளை முதல் ஆன்லைன் மூலம் மது விற்பனையைத் தொடங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த மார்ச் 25 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் மத்திய உள்துறை அமைச்சகம் ஊரடங்கை சில தளர்வுகளுடன் மே 17 வரை நீட்டித்தது. இப்போது மே 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூறிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. அந்தத் தளர்வுகளின் அடிப்படையில் மாநிலங்கள், மதுபானக் கடைகளைத் திறந்தன. 40 நாட்களுக்கும் மேலாக மதுபானக் கடைகள் திறக்கப்படாததால் கடைகளின் முன்பு மதுக் குடிப்போரின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது. இதனால் பெரும்பாலான கடைகளில் சமூக இடைவெளி என்பது கேள்விக் குறியானது.
இதனையடுத்து உச்சநீதிமன்றம் மதுபானங்களை மதுக் குடிப்போர் வீடுகளுக்கே கொண்டு செல்லும் ஏற்பாடுகளை மாநில அரசுகள் செய்யலாம் என அறிவுறுத்தியது. அதன் படி சத்தீஸ்கர், மேற்கு வங்கம் , பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் மதுபானங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்யும் முறையை நடைமுறையை அமல்படுத்தின. இந்நிலையில் தற்போது இந்த நடைமுறையை இந்தியாவின் பல மாநிலங்கள் நடைமுறைப்படுத்தப் போவதாகத் தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து ஜார்க்கண்ட் மாநில அரசு சுவிக்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனால் ராஞ்சி நகரத்தில் நேற்று முதல் தங்கள் மதுபான ஹோம் டெலிவரியை சுவிக்கி நிறுவனம் தொடங்கியுள்ளது. இப்போது ஒடிசாவில் அரசே பிரத்யேக இணையதளத்தை உருவாக்கி அதன் மூலம் மதுவிற்பனையை நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளது. அதன் படி மதுக் குடிப்போர் osbc.co.in என்ற இணையதளத்துக்குச் சென்று மதுவகையைத் தேர்ந்தெடுத்து ஆன்லைனில் பணம் செலுத்தினால் தாங்கள் விரும்பும் மது வகை வீடு தேடி வரும் என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.