விண்ணில் பாய தயாராகும் NVS 02 செயற்கைக் கோள் ..!
செய்தியாளர்: பால வெற்றிவேல்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், புவி நில வரைபட வடிவமைப்பு மற்றும் நிகழ் நேர இடத்தரவுகளை பெறுவதற்கான NVS வகை செயற்கை கோள்களை அனுப்பி வருகிறது. கடந்த மே 2023 அன்று ஏற்கெனவே NVS 01 செயற்கை கோள் அனுப்பப்பட்ட நிலையில், பல தொழில்நுட்ப செயல்பாடுகளுக்கு புதிய நில வரைபட செயற்கைக்கோள் அவசியமாகிறது.
இந்நிலையில், இஸ்ரோ US ராவ் செயற்கைக்கோள் மையத்தில் NVS 02 செயற்கைக்கோளை உருவாக்கியது. இந்த செயற்கைக்கோள் 29-ம் தேதி நாளை (புதன்கிழமை) காலை 6.23 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எப்-15 ராக்கெட் மூலம் விண்ணில் பாய உள்ளது. இதற்கான 27 மணி நேர கவுண்டவுன் இன்று அதிகாலை 3:30 மணிக்கு தொடங்கியதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
2250 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோளை 50 மீட்டர் உயரம் கொண்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட் பூமியிலிருந்து 322 கிலோமீட்டர் உயரத்தில் நிலை நிறுத்த உள்ளது. போக்குவரத்து மேலாண்மை, நில வடிவமைப்பு, துல்லியமான விவசாயம், துரித நிவாரண சேவைகள். ஜியோடெடிக் சர்வே, மொபைல் பிளாட் ஃபாரங்களில் இடம் சார்ந்த சேவைகள் போன்ற செயல்பாடுகளை NVS 02 செயற்கைக்கோள் மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.