சுகாதாரத்துறைக்கு 'சற்றே' கூடுதல் நிதிதான். ஆனால், ஊட்டச்சத்துக்கு? - ஓர் அலசல்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூ.64,180 கோடி (8.7 பில்லியன் டாலர்) செலவில் பிரதம மந்திரி ஆத்மா நிர்பர் ஸ்வஸ்த் பாரத் யோஜனா என்ற புதிய சுகாதாரத் திட்டம் ஒன்றை மத்திய பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
இந்தத் திட்டம் ஆறு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் என்று அவர் கூறினார். ஆனால், விரிவான பட்ஜெட் ஆவணத்தில் 2021-22 ஆம் ஆண்டிற்கான இந்தத் திட்டம் குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. எனவே, இந்த ஆண்டு எந்தவொரு சுகாதார செலவினத்திற்கும் இந்தப் பணம் எவ்வளவு வழிவகுக்கும் என்பது தெளிவாக இல்லை.
சுகாதாரத்துக்கான முன்னோடியில்லாத செலவினம் ரூ.2,23,846 கோடி (30.6 பில்லியன் டாலர்) நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இது கடந்தாண்டு 2020-21 வரவு-செலவுத் திட்டத்தை விட 137% அதிகம் என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.
இருப்பினும், வழக்கமாக சுகாதாரத்துக்கான செலவினம், சுகாதார அமைச்சகத்திற்கு மட்டுமே செலவாகும் என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், அரசாங்கம் இந்த முறை சுகாதார பட்ஜெட் திட்டத்தை குறுக்குவெட்டு முறையில் வழங்கியுள்ளது.
சுகாதார அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம், குடிநீர் மற்றும் சுகாதாரத் துறை, சுகாதாரம், நீர் மற்றும் சுகாதாரத்திற்கான நிதி ஆணையத்தின் ஒதுக்கீடு மற்றும் கோவிட் -19 தடுப்பூசிக்கு புதிய நிதி ஒதுக்கீடு ஆகியவற்றைச் சேர்ப்பதன் மூலம் இந்தாண்டுக்கான நிதி ஒதுக்கீடானது அதிகரித்துள்ளது.
2020-21 பட்ஜெட்டில், இந்தியாவின் சுகாதார அமைச்சகத்திற்கு ரூ.67,112 கோடி (9.18 பில்லியன் டாலர்) ஒதுக்கீடு செய்யப்பட்டது. கொரோனா தொற்றின் காரணமாக நடப்பு நிதியாண்டில் திருத்தப்பட்ட மதிப்பீடுகள் - அல்லது செலவிடப்பட்டதாக மதிப்பிடப்பட்ட தொகை ரூ.82,928 கோடியாக உயர்ந்துள்ளது.
"பல்வேறு புதிய சுகாதார பிரச்னைகளை எதிர்கொள்ள அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். இதை இந்த பட்ஜெட் பிரதிபலிக்க தவறிவிட்டது. இந்தாண்டு வெறும் 10% மட்டும்தான் சுகாதார ஒதுக்கீடு அதிகரித்துள்ளது. நாட்டில் சுகாதாரத்துறைக்கு செலவிடப்படும் அல்லது ஒதுக்கப்படும் நிதி என்பது எப்போதும் போதுமானதாக இருப்பதில்லை. பெருந்தொற்று ஏற்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் ஒதுக்கியுள்ள நிதி போதுமானதல்ல" என்று பொருளாதார நிபுரணர் அவானி கபூர் தெரிவித்துள்ளார்.
ஊட்டச்சத்து குறைபாடு...
2020 டிசம்பரில் 2019-20ம் ஆண்டுக்கான தேசிய குடும்ப மற்றும் சுகாதார கணக்கெடுப்பின் படி இந்தியாவில் ஊட்டச்சத்து அளவு குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளிடையே ஊட்டச்சத்து குறைபாடு, உணவு வீணடிக்கப்படுதல் மற்றும் நிலையற்ற அளவுகளின் தரவு ஆகியவை நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் உயர்ந்துள்ளதாக கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்னைகளுக்கு தீர்வு கண்டு, இவற்றை மாற்றியமைக்க பல தசாப்தங்கள் தேவைப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட நிலையில், இப்போதைய பட்ஜெட் ஊட்டசத்துக்கு (Nutrition) பெரிய அளவில் நிதி ஒதுக்க தவறிவிட்டது.
"ஒட்டுமொத்தமாக, இந்தியா எதிர்கொள்ளும் ஊட்டச்சத்து சவாலின் தீவிரத்தோடு, நிதி ஒதுக்கீடுகள் சீரமைக்கப்பட்டும் வகையில் இந்த பட்ஜெட் இல்லை. இந்த புதிய பட்ஜெட்டில் ஊட்டச்சத்து சேவைகளுக்கான ஒதுக்கீட்டில் கணிசமான மாற்றங்கள் ஏதும் ஏற்படவில்லை. இது சிக்கலானது. ஏனென்றால் ஐசிடிஎஸ் (ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள்) முந்தைய ஆண்டுகளில் கூட அதிகமான குழந்தைகளை சென்று அடையவில்லை" என்று சர்வதேச உணவு கொள்கை ஆராய்ச்சி நிறுவனத்தில் பூர்ணிமா மேனன் கூறியுள்ளார்.
"கடந்த சில ஆண்டுகளில், அரசாங்கம் ஏற்கெனவே ஊட்டச்சத்துக்கான ஒதுக்கீட்டை குறைவாக செலவழித்து வருகிறது. மேலும் அடுத்தடுத்து வரும் ஆண்டுகளில் கூட ஒதுக்கீட்டை கணிசமாக அதிகரிக்கவில்லை. கடந்த சில ஆண்டுகளில் திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீடுகளிலிருந்து பல பெண்கள் மகப்பேறு காலங்களில் தங்கள் ஊட்டச்சத்தை பெறுவதற்கான எந்த வழிகளும் மேற்கொள்ளபடவில்லை என்பதை நாங்கள் அறிவோம்.
அங்கன்வாடி மையங்களில் டேக்-ஹோம் ரேஷன்கள் குறைந்த அளவில் நடக்கிறது. பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதியே இந்த பற்றாக்குறையை காட்டுகின்றன. இந்த ஆண்டு ஊட்டச்சத்து அளவு நாடு முழுவதும் மோசமாக இருக்கும் என்று உறுதியாக நம்பலாம்" என்று டெல்லியின் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டிபா சின்ஹா தெரிவித்துள்ளார்.
ஊட்டச்சத்து பட்ஜெட்டை பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் (புதிய தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறித்து ஆராய்கிறது) மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் (இது பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கான மதிய உணவைப் பார்க்கிறது) கையாளப்படுகிறது. இரண்டையும் சுகாதார அமைச்சகம் கையாளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்யும் மதிய உணவுத் திட்டம், நடப்பு நிதியாண்டுடன் (ரூ.11,000 கோடி) ஒப்பிடும்போது 2021-22 ஆண்டு பட்ஜெட்டில் ரூ.11,500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்தாண்டை காட்டிலும் வெறும் 500 கோடி ரூபாய் மட்டுமே அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. அரசாங்க தரவுகளின்படி, சுமார் 11 கோடியே 6 லட்சம் குழந்தைகள் மதிய உணவை நம்பியுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.
- மலையரசு
தகவல் உறுதுணை: India Spend