கேரள பிஷப்பை கைது செய்ய வலியுறுத்தி கன்னியாஸ்திரிகள் போராட்டம்!
கன்னியாஸ்திரியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்பட்ட வழக்கில், பிஷப் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கன்னியாஸ்திரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில், பிராங்கோ முல்லக்கால் என்பவர் பிஷப்பாக இருக்கிறார். இவர், அங்கு பணிபுரியும் கன்னியாஸ்திரியை, 2014 முதல் 2016 வரை பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், பிராங்கோ மீது தேவாலய நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
புகார் கொடுத்து 74 நாட்கள் ஆகியும், போலீசார் கைது செய்யாததையும் கண்டித்து, ஐந்து கன்னியாஸ்திரிகள் கோட்டயத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரிக்கு நியாயம் கிடைக்கும் வரை இந்த போராட்டம் தொடரும் என தெரிவித்தனர்.
இதுபற்றி அந்த கன்னியாஸ்திரிகள் கூறும்போது, ‘எங்கள் சகோதரிக்காக நாங்கள் போராடுகிறோம். தேவாலய நிர்வாகம், அரசு மற்றும் போலீஸ் துறைகள் மூலம் நீதி மறுக்கப்பட்டு வருகிறது. நீதி கிடைப்பதற்காக, நாங்கள் எந்த எல்லைக்கும் செல்வோம். பிஷப்புக்கு எதிராக தேவையான ஆதாரங்கள் இருந்தும் அவர் கைது செய்யப்படவில்லை.
இந்த விவகாரத்தில் தேவாலயத்தில் நிலை என்ன என்பதும் தெரியவில்லை. புகார் கொடுத்து 74 நாட்கள் ஆகியும் அவர் மீது எந்த நடவடிக் கையும் எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியிடம் போலீசார், பல முறை விசாரணை நடத்தினர். ஆனால் குற்றம் சாட்டப்பட்ட பிஷப்பிடம் ஒரே ஒரு முறை மட்டுமே விசாரித்துள்ளனர். போலீசார் இந்த வழக்கை நீர்த்து போக செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டுள் ளனர்’ என்று கூறினர்.