இந்திய அறிவியல் துறைக்கு ஏற்பட்ட பேரிழப்பு... அணு விஞ்ஞானி டாக்டர் ஆர். சிதம்பரம் மறைவு!
அணு விஞ்ஞானி டாக்டர் ஆர். சிதம்பரம் காலமானார். பொக்ரான் அணு ஆயுத சோதனையில் முக்கிய பங்கு வகித்தவர் இவர்.
பிரபல அணு விஞ்ஞானி டாக்டர் ஆர். சிதம்பரம் மும்பையில் காலமானார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இவருக்கு வயது 88. இந்தியாவின் அணுசக்தி திட்டத்தில் முக்கிய பங்கு வகித்த இவர், நவம்பர் 11, 1936 ல் சென்னையில் பிறந்தவர். இந்தியாவின் அணு ஆயுத வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காகவும், அரசால் பல விதங்களில் கௌரவிக்கப்பட்டார். பல்வேறு அறிவியல் நிறுவனங்களில் தலைமை பொறுப்பும் வகித்துள்ளார் இவர்.
ராஜஸ்தானின் பொக்ரானில் 1974 மற்றும் 1998ம் ஆண்டு அணு ஆயுத சோதனைகளில் முக்கிய பங்காற்றினார். பாபா அணு ஆராய்ச்சி மையத்தின் (BARC) இயக்குனராக 1990 முதல் 1993 வரை அமைப்பை வழிநடத்தினார். அணுசக்தி ஆணையத்தின் தலைவராக 1993 முதல் 2000 வரை பணியாற்றினார். இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகராக 2001 முதல் 2018 வரை பதவியில் இருந்தார்.
1974 பொக்ரான் அணுகுண்டு சோதனைக்கு தலைமை தாங்கிய சிதம்பரத்திற்கு அமெரிக்கா விசா மறுத்தது ஒரு முக்கியமான நிகழ்வு. அதேநேரம் சிதம்பரம், வெளிநாட்டில் இருந்து தொழில்நுட்பத்தை வாங்க எதிர்ப்பு தெரிவித்தார். அதற்கு காரணம், நாட்டில் மேம்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்குவதே அவரின் பார்வையாக இருந்தது.
சிதம்பரம் தலைமையிலான குழு DRDO உடன் இணைந்து 1998 பொக்ரான் சோதனைக்கான உபகரணங்களை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது. இன்று அவரின் மறைவு இந்திய அறிவியலுக்கு பெரும் பேரிழப்பை ஏற்படுத்தி இருக்கிறது