எஞ்சின் இல்லாமல் 2 கி.மீ தூரம் ஓடிய சரக்கு ரயில்
ஒடிஷாவில் நிலக்கரி ஏற்றிச்சென்ற சரக்கு ரயிலில் இருந்து 6 பெட்டிகளின் இணைப்பு மட்டும் துண்டிக்கப்பட்டு, எஞ்சின் இல்லாமல் 2 கி.மீ தூரத்துக்கு சென்றது.
ஒடிசாவில் நிலக்கரி ஏற்றிச்சென்ற சரக்கு ரயில் ஒன்று தமரா பகுதியில் இருந்து கிளம்பியிருக்கிறது. ரயில் காந்தபாடா மற்றும் பஹானாகா ரயில் நிலையங்களுக்கு இடையே வந்தபோது எதிர்பாராதவிதமாக ரயிலின் கடைசி 6 பெட்டிகளின் இணைப்பு மட்டும் துண்டானது. இந்த 6 பெட்டிகளும் எஞ்சின் இல்லாமல் சுமார் 2 கி.மீ தூரத்திற்கு சென்று நின்றுள்ளது. இருப்பினும் ரயில் பெட்டிகள் எஞ்சின் இல்லாமல் ஓடியதில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் 7ம் தேதி அகமதாபாத் - பூரி எக்ஸ்பிரஸ் ரயிலின் 22 பெட்டிகள் பயணிகளுடன் என்ஜின் இல்லாமல் சுமார் 13 கி.மீ தூரம் சென்று நின்றது. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்குள் மீண்டும் சரக்கு ரயிலின் பெட்டிகள் என்ஜின் இல்லாமல் ஓடியுள்ளது.