உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ககாடியோ காவல் நிலையத்தில், பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி புகாரளிக்க சென்ற சிறுமியிடம்” நீ அவ்வளவு அழகாக இல்லை, அதனால் யாரும் உன்னை பாலியல் வன்கொடுமை செய்திருக்கமாட்டார்கள்” என்று காவல்துறை அதிகாரி கூறியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தனது பெற்றோர் காலமான பிறகு கான்பூரின் ககாடியோ பகுதியிலுள்ள தாய்வழி பாட்டியுடன் வாழ்ந்து வருகிறார். ஜூன் 15 அன்று ஒரு உள்ளூர் ரவுடி அவனது கூட்டாளிகளுடன் சேர்ந்து, அச்சிறுமியின் வீட்டிற்குள் நுழைந்து அவளைத் பாலியல் வன்கொடுமை செய்தான். மேலும் அச்சிறுமி மீது மதுபானம் ஊற்றியதுடன், அவரின் ஆடைகளை கிழித்ததாகவும் கூறப்படுகிறது. சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு உள்ளூர்வாசிகள் அவரை மீட்டனர்.
இதுகுறித்து புகார் அளிப்பதற்காக ககாடியோ காவல் நிலையத்திற்கு அச்சிறுமி சென்றார். இது குறித்து பேசிய அச்சிறுமி“ நான் ககாடியோ காவல் நிலையத்திற்கு சென்றேன். ஆனால் அவர்கள் முறையான புகார் அளிக்க எனக்கு உதவுவதற்கு பதிலாக, அங்கு பணியில் இருந்த காவல்துறை அதிகாரி என்னிடம் “பாலியல் வன்கொடுமை செய்யும் அளவுக்கு நீ அழகாக இல்லை”என்று கூறினார் என தெரிவித்துள்ளார். காவல்துறை அதிகாரி மீது சிறுமி சுமத்திய குற்றச்சாட்டுகளை சரிபார்க்க விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
மற்றொரு சம்பவம்: உத்தரபிரதேசத்திலுள்ள கோவிந்த் நகர் காவல் நிலையத்திற்கு, பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி புகார் அளிக்க சென்ற சிறுமியிடம் “ தனக்கு முன்னாள் நீ நடனமாடினால் வழக்கு பதிவு செய்வேன்” என்று அந்த காவல்நிலை அதிகாரி கூறியதாக சிறுமியின் தாயார் புகார் கூறியுள்ளார்.