வெங்காயத்தை தொடர்ந்து உருளைக்கிழங்கின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தலைநகர் டெல்லியில் உருளைக் கிழங்கின் விலை 75 சதவிகிதமும், கொல்கத்தாவில் விலை இருமடங்காகவும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் முக்கிய நகரங்களில் வெங்காயத்தைத் தொடர்ந்து உருளைக்கிழங்கின் விலையும் கடுமையாக அதிகரித்து வருகிறது.
டெல்லியில் ஒரு கிலோ உருளைக்கிழங்கின் விலை 32 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதுவே கடந்த ஆண்டின் இதே காலங்களில் டெல்லியில் ஒரு கிலோ உருளைக்கிழங்கு 18 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்பட்டது.
இதேபோல, நாட்டின் மற்ற முக்கிய நகரங்களான மும்பை, கொல்கத்தா, சென்னை உள்ளிட்ட இடங்களிலும் உருளைக் கிழங்கு விலை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் முதல்தர உருளைக் கிழங்கு 60 ரூபாய் வரை விற்கிறது. உருளைக்கிழங்கு அதிகம் விளையும் பஞ்சாப், உத்தர பிரதேசம், மேற்கு வங்க மாநிலங்களில் பருவம் மாறி அக்டோபரில் மழை பெய்ததே விளைச்சல் குறையக் காரணமாகக் கூறப்படுகிறது.