அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணமில்லை: தேவகவுடா

அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணமில்லை: தேவகவுடா
அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணமில்லை: தேவகவுடா

முழு நேர அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணமில்லை என்று முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார். 

கர்நாடகாவில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன. முதலமைச்சராக ஜனதா தளம்(எஸ்) கட்சியைச் சேர்ந்த குமாரசாமி இருக்கிறார். இவர், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் இரண்டாவது மகன். மக்களவைத் தேர்தலில் மாண்டியா தொகுதியில் இவர் பேரனும் முதலமைச்சர் குமாரசாமியின் மகனுமான நிகில் குமாரசாமியும், ஹாசன் தொகுதியில் அமைச்சர் எச்.டி.ரேவண்ணாவின் மகனும் தேவகவுடாவின் மற்றொரு பேரனுமான பிரஜ்வலும் போட்டியிட்டுள்ளனர். 

இவர்கள் வேட்பு மனு தாக்கலுக்கு முன்பாக, ஹாசன் மாவட்டத்தில் உள்ள, குலதெய்வ கோவிலில் சிறப்பு பூஜை செய்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய போது, தேவகவுடா, ‘’மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் என் பேரன் பிரஜ்வல் போட்டியிடுகிறார். அவருக்கு நீங்கள் வாக்களிக்க வேண்டும். நான் இனி தேர்தலில் போட்டியிடமாட்டேன். இனி தேர்தலில் நிற்கப்போவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்’’ என்று கண்ணீர் மல்க கூறினார்.

ஆனால், அடுத்த சில நாட்களிலேயே தும்கூர் தொகுதியில் வேட்பாளராக களமிறங்கினார். இந்நிலையில், அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணமில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். 

இதுபற்றி அவர் கூறும்போது, ‘’ அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகக் கூறியிருந்தேன். அது உண்மைதான். ஆனால், இப்போதைய சூழ்நிலை, என்னை தேர்தலில் போட்டியிட வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளியுள்ளது. அதனால் முழு நேர அரசியலில் இருந்து ஓய்வு பெறும் எண்ணமில் லை. ராகுல் காந்தி வெற்றி பெற்று பிரதமர் ஆனால், அவருக்குப் பக்கப்பலமாக நான் இருப்பேன்’’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com