பிரதமர் மோடியை கேலி செய்த நார்வே ஊடகம்.? இந்தியாவில் கடும் எதிர்ப்பு!
வெளிநாடுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, நார்வே நாட்டுக்கு சென்றார். அப்போது நார்வே பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோருடன் இணைந்து பொதுவெளியில் தோன்றியபோது, பிரதமர் மோடி ஏன் ஊடகங்களின் கேள்விகளை எதிர்கொள்ளவில்லை என்று நார்வேயைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஹெல் லிங் கேட்டார். ஆனால், மோடி அதற்கும் பதிலளிக்காமல் வெளியேறினார்.
இந்தச் சம்பவத்தை வீடியோவாக பகிர்ந்த ஹெல்லே லிங், "உலகப் பத்திரிகை சுதந்திரக் குறியீட்டில் நார்வே முதலிடத்தில் உள்ளது. ஆனால், இந்தியா 157ஆவது இடத்தில் உள்ளது. பாலஸ்தீனம், அமீரகம் மற்றும் கியூபா ஆகிய நாடுகளுடன் இந்தியா பின்தங்கியுள்ளது" என்று சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் Aftenposten என்ற பத்திரிகை பிரதமர் மோடி ஒரு தந்திரசாலி மற்றும் சற்றே எரிச்சலூட்டும் மனிதர் என்று தலைப்பிட்டு பிரதமர் மோடி கையில் மகுடியை வைத்துக் பாம்பை பிடிக்க முயல்வது போன்ற ஒரு சித்திரத்தை வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், இந்த சித்திரத்திற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இணையத்தில் பலர் இதை அப்பட்டமான இனவெறி என்றும், இந்தியாவை 'பாம்பாட்டியர்களின் தேசம்' என்று சித்தரித்த பழைய காலனித்துவப் பழமைவாதங்களில் வேரூன்றியது என்றும் கூறி வருகிறார்கள். பலர் அந்த செய்தித்தாளைக் கடுமையாகச் சாடி, அதில் உள்ள சித்திரம் அந்நியர் வெறுப்பைக் காட்டுவதாகவும், இந்தியாவையும் அதன் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரையும் அவமரியாதை செய்கின்றனர் எனவும் வாதிட்டு வருகிறார்கள் .
முன்னதாக 2014-ஆம் ஆண்டு அமெரிக்காவின் மேடிசன் ஸ்கொயர் கார்டனில் ஆற்றிய உரையில், இந்தியா ஒரு காலத்தில் வெளிநாடுகளில் ‘பாம்பு பிடிப்பவர்களின்’ நாடாகப் பார்க்கப்பட்டு வந்ததாகவும், பின்னர் அது தொழில்நுட்பத்தால் முன்னேறி ‘மவுஸ் பிடிப்பவர்களின்’ நாடாக உருவெடுத்ததாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டிருந்தார்.

