வடகிழக்கில் தடங்களை குறைக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்: உறைய வைக்கும் பின்னணி!

வடகிழக்கில் தடங்களை குறைக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்: உறைய வைக்கும் பின்னணி!
வடகிழக்கில் தடங்களை குறைக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம்: உறைய வைக்கும் பின்னணி!

வடகிழக்கு பிராந்தியத்தையே ஆட்டிப் படைத்து வரும் ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு (ஏஎஃப்எஸ்பிஏ) முற்றுப்புள்ளி வைப்பதற்கான தொடக்கப் புள்ளியை மத்திய அரசு போட்டிருப்பது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. சுமார் அரை நூற்றாண்டு காலத்துக்கும் மேலாக வடகிழக்கு மாநிலங்களில் அழுத்தமாக கால் தடம் பதித்திருந்த இந்த சட்டத்தை, சில பகுதிகளில் இருந்து திரும்பப் பெறுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, அசாமில் 23 மாவட்டங்களில் இருந்தும், நாகாலாந்தில் பகுதி அளவாக 7 மாவட்டங்களில் இருந்தும், மணிப்பூரில் 6 மாவட்டங்களில் இருந்தும் ஆயுதப் படை சிறப்பு அதிகார சட்டம் வெளியேறப் போவது உறுதியாகிவிட்டது. இதனை சம்பந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். இந்த சட்டத்துக்கு எதிராக போராடி உயிர் நீத்த, தங்கள் மூதாதையர்களின் கனவு நனவாகிவிட்டதாக அவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர். அரசால் இயற்றப்பட்ட ஒரு சட்டத்துக்கு ஏன் இத்தனை மக்கள் எதிராக நிற்கிறார்கள்? அப்படி இந்த சட்டம் வடகிழக்கில் என்ன செய்தது? இத்தனை காலம் இல்லாமல், இந்த சட்டத்தின் மீதான மத்திய அரசின் திடீர் மனமாற்றத்துக்கு என்ன காரணம்? இவை குறித்து இங்கு காணலாம்.

வடகிழக்கு பிராந்தியத்தில் 1950-களில் நாகா நேஷனல் கவுன்சில் (என்எஸ்சி) என்ற பிரிவினைவாத அமைப்பு உருவாகியது. இப்போது பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என்எஸ்சி (என்) தீவிரவாத அமைப்பின் முந்தைய வடிவம்தான் அது. நாகாலாந்து தலைமையில் வடகிழக்கு பிராந்தியத்தை தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்ற கொள்கையுடன் களமிறங்கிய இந்த அமைப்பு, தனது பிரிவினைவாத பிரசாரத்தை தீவிரப்படுத்தியது. சுதந்திரம் பெற்ற 13 ஆண்டுகளுக்குள்ளாக நாட்டில் பிரிவினைவாத கோஷம் எழும்புவது அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஆரம்பத்திலேயே இந்த பிரச்னையை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க எண்ணிய நேரு அரசு, ஆயுதப் படையினருக்கு அளவற்ற அதிகாரங்களை வழங்கும் சட்டத்தை இயற்ற அனுமதி அளித்தது. அப்படி உருவானது தான் ஆயுதப் படையினர் சிறப்பு அதிகாரச் சட்டம். நாடாளுமன்றத்தின் ஒப்புதலை அடுத்து, நாகாலாந்தில் முதன்முதலாக 1958-இல் இந்த சட்டம் அமல்படுத்தப்பட்டது. நாகாலாந்தை தொடர்ந்து, நாகா நேஷனல் கவுன்சில் மற்றும் மிசோ தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் இருப்பதாக கருதப்பட்ட மணிப்பூரின் 5 மாவட்டங்களில் 1960-ம் ஆண்டு இந்த சட்டம் அமலுக்கு வந்தது. இதன் தொடர்ச்சியாக, வடகிழக்கில் உள்ள மற்ற மாநிலங்களிலும் தனது எல்லையை விரிவுப்படுத்திக் கொண்டு கம்பீரமாக அமர்ந்தது ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம்.

அதிகார துஷ்பிரயோகங்களும், ரத்தக் கறை போராட்டங்களும்...

இந்த சட்டமானது, வரம்பில்லா அதிகாரங்களை ராணுவம் உள்ளிட்ட ஆயுதப் படையினருக்கு அள்ளி வழங்குகிறது என்பதுதான் அனைத்து பிரச்னைகளுக்குமான தொடக்கப் புள்ளி. அதாவது, இந்த சட்டத்தின் கீழ் யாரை வேண்டுமானாலும் பிடியாணை இல்லாமல் ஆயுதப் படையினரால் கைது செய்யவும், அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்ளவும் முடியும்.

சட்டத்துக்கு புறம்பாக நடந்து கொண்டாலோ, ஆயுதங்களை வைத்திருப்பதாக சந்தேகம் வந்தாலோ துப்பாக்கிச் சூடு நடத்தவும், அவ்வளவு ஏன்.. கட்டிடத்தை தகர்ப்பதற்கும் கூட இந்த சட்டம் அதிகாரம் அளிக்கிறது. ஒருவேளை, இதுபோன்ற நடவடிக்கைகளில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டாலும் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் எந்தவொரு பாதுகாப்புப் படையினரையும் விசாரிக்க முடியாது. விசாரணைக்கான அனுமதியும் சுலபமாக கிடைத்துவிடாது. இந்த அளவில்லாத அதிகாரங்களாலும், சட்டக் கவசங்களாலும் வடகிழக்கு மக்கள் கடுமையான பாதிப்பையும், இன்னல்களையும் சந்தித்து வந்துள்ளார்கள். ஆயுதப் படையினரால் நிகழ்த்தப்பட்ட எண்ணிலடங்காத மனித உரிமை மீறல்களுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு இரையாகி இருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான கொடூரமான பாலியல் வன்கொடுமை சம்பவங்களும் ஆயுதப் படை வீரர்களால் அங்கு அரங்கேற்றப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், இந்தக் குற்றங்களில் ஈடுபட்ட பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் மீது கூட இதுவரை எந்த நடவடிக்கையும் அரசு சார்பில் எடுக்கப்பட்டதில்லை. இதுதான் ஏஎஃப்எஸ்பிஏ சட்டத்துக்கு எதிராக மக்கள் கொதித்தெழுவதற்கு முக்கியக் காரணம்.

இந்திய வரலாற்றில் ஏஎஃப்எஸ்பிஏ சட்டத்துக்கு எதிராக எத்தனை எத்தனையோ ரத்தக் களறி போராட்டங்கள் நடந்திருக்கின்றன. ஆனால், அந்தப் போராட்டங்கள் யாவும், நடந்த சுவடே தெரியாமல் ஒடுக்கப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, 2004-ம் ஆண்டு மணிப்பூரில் சில பெண்கள் இந்த சட்டத்துக்கு எதிராக நிர்வாணப் போரட்டத்தை நடத்தினார்கள். இதுதான், இந்திய மக்களின் கவனத்தை வடகிழக்கை நோக்கியும், சர்வாதிகாரத்தனமான இந்த சட்டத்தை நோக்கியும் முதன்முதலில் திருப்பியது.

எந்த அளவுக்கு கொடுமையை அனுபவித்திருந்தால், பட்டப்பகலில் பெண்கள் தங்கள் உடைகளை துறக்க துணிந்திருப்பார்கள் என நாடு முழுவதும் மக்கள் பேசத் தொடங்கினர். இச்சட்டத்தை நீக்க வேண்டும் என பல ஆணையங்கள் பரிந்துரைக்கவும் செய்தன. ஆனாலும், ஏஎஃப்எஸ்பிஏ சட்டத்தின் மீது கை வைக்கவும், ஏன் குறைந்தபட்சம் அதனை திருத்தியமைக்கவும் கூட அரசாங்கம் தயாராக இல்லை.

சீனாவின் கையும்.. அரசின் திடீர் மனமாற்றமும்...

பன்னெடுங்காலமாக ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டம், வடகிழக்கு பிராந்தியத்தில் கோரத்தாண்டத்தை ஆடி வந்தாலும் அதனை கண்டும் காணாமல் இருந்த அரசாங்கம், இப்போது திடீரென மனம் இறங்கி வந்திருப்பதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், நாகாலாந்தில் தீவிரவாதிகள் என நினைத்து நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் மீது 'அசாம் ரைஃபிள்ஸ்' படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 6 அப்பாவி தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பின்னர், இதற்கு எதிராக நடந்த போராட்டத்தை ஒடுக்குவதற்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்தனர். இந்தக் கொடூர சம்பவமானது உறங்கிக் கொண்டிருந்த இந்தியாவின் மனசாட்சியை தட்டி எழுப்பியது. இந்த சட்டத்துக்கு எதிராக நீறுபூத்த நெருப்பாக இருந்து வந்த வடகிழக்கு மக்களின் கோபமும் ஆவேசமாக வெளிப்பட்டது.

ஏஎஃப்எஸ்பிஏ சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி நாகாலாந்து, அசாம், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தினர். இதில் ஆங்காங்கே வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றன. இதற்கு முன்பு ஏதேனும் ஒரு மாநிலத்தில், ஏதாவது ஒரு சில பகுதிகளில் மட்டுமே நடந்து வந்த ஏஎஃப்எஸ்பிஏ எதிர்ப்பு போராட்டம், வடகிழக்கு பிராந்தியம் முழுவதும் பரவியதை அரசாங்கம் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

குறிப்பாக, அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் பல பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா எத்தனித்து வரும் நிலையில், அந்த பிராந்தியத்தில் அசாதாரண சூழல் உருவாவதை மத்திய அரசு விரும்பவில்லை. வடகிழக்கு மக்களின் கொந்தளிப்பை பயன்படுத்தி, அங்கு மேலும் ஸ்திரமற்ற சூழலை சீனா ஏற்படுத்திவிடும் என்பதும் இந்தியாவின் அச்சத்துக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. அதேபோல, வடகிழக்கு மக்களின் போராட்டத்தை நாகாலாந்து, மிசோராம், மணிப்பூர் மாநிலங்களில் இயங்கி வரும் தீவிரவாதக் குழுக்கள் தங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொண்டு, உள்நாட்டு கலவரத்தை தூண்டும் வாய்ப்பு இருப்பதாக உளவு அமைப்புகளும் இந்திய அரசை எச்சரித்து வந்தன.

அனைத்துக்கும் மேலாக, ஏற்கனவே இந்தியாவில் இருந்து அந்நியப்பட்டு கிடப்பதாக கருதி வரும் வடகிழக்கு பிராந்திய மக்கள், இந்திய அரசாங்கத்தின் மீது உள்ள கோபத்தால் சீனாவின் சதிவலையில் எளிதில் வீழ்ந்து விடும் சாத்தியக்கூறுகளும் தென்பட்டன. இவற்றை எல்லாம் அலசி ஆராய்ந்த பிறகே, ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை சில பகுதிகளில் இருந்து மத்திய அரசு தற்போது திரும்பப் பெற்றிருக்கிறது.பெருங்கோபத்தில் இருக்கும் வடகிழக்குவாசிகளை ஓரளவுக்கு சமாதானப்படுத்தவே இந்த அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளது மோடி அரசு. ஆனால், எப்போது வேண்டுமானாலும் தீவிரவாதம் தலைதூக்குகிறது எனக் கூறி இந்த சட்டத்தை மீண்டும் அந்தப் பகுதிகளில் அமல்படுத்த முடியும் என்பதை வடகிழக்கு பிராந்தியம் மறந்துவிடக் கூடாது.

தீவிரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டம் தேவைதான். ஆனால், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு அச்சட்டத்துக்கு சுதந்திரம் கொடுக்க கூடாது என்பதே நாட்டு மக்களின் விருப்பம். ஏஎஃப்எஸ்பிஏ சட்டத்தை முழுமையாக ரத்து செய்வது தீவிரவாதக் குழுக்களுக்கே மேலும் வலு சேர்த்துவிடும். ஆதலால், ஏஎஃப்எஸ்பிஏ சட்டத்தில் பொதுமக்களை பாதிக்காத அளவுக்கு திருத்தங்களை மேற்கொள்வதே புத்திசாலித்தனமான அணுகுமுறையாக இருக்கும். மீண்டும் தீவிரவாதிகளின் ஆதிக்கம் வந்தால், ஏஎஃப்எஸ்பிஏ மறுபடியும் வந்துவிடும் என தீவிரவாதிகள் அஞ்ச வேண்டுமே தவிர, பொதுமக்கள் பயப்படும் அளவுக்கு ஒரு சட்டம் இருக்கக் கூடாது. மக்களுக்காகவே சட்டம்; சட்டத்துக்காக மக்கள் இல்லை என்பதை அரசாங்கத்துக்கு மீண்டும் நினைவுப்படுத்த வேண்டி இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com