தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்திருப்பதை அடுத்து, வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது.
இமாச்சலில் பெய்து வரும் கனமழையால் இதுவரை 22 பேர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 12 பேர் காயமடைந்திருப்பதாக தெரியவந்துள்ளது. மொத்தம் 490 கோடி ரூபாய் அளவுக்கு பொருட்கள் சேதமாகி இருப்பதாக அம்மாநில அரசு தகவல் வெளியிட்டுள்ளது.
மலை பிரதேசமான இமாச்சலில் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டிருப்பதால் முக்கிய நகரங்களை இணைக்கும் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதே போல் உத்தராகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 22 பேர் காணாமல் போய் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
கனமழையால் மரங்கள் வேரோடு முறிந்து விழுந்ததில், வீட்டின் கூரைகள் சேதமடைந்துள்ளன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்து வரும் நாட்களுக்கும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருப்பதால், உத்தராண்டில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
யமுனை மற்றும் காக்ரா நதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பாராபங்கி மாவட்டத்தில் காக்ரா நதி பாயும் எல்கின் பாலத்தில் அபாய கட்டத்தை தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்திருப்பதால் அங்கு போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கல்பி பகுதியில் யமுனை நதியில் அபாய கட்டத்தை கடந்து வெள்ளம் ஓடுவதால், 12 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.