இந்திய ரயில்களில் 10 ஆண்டுகளில் ஏசி இருக்கைகள், படுக்கைகள் 2 மடங்கு அதிகரிப்பு!
இந்திய ரயில்களில் கடந்த பத்தாண்டுகளில் ஏசி இருக்கைகளும் படுக்கைகளும் இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாகவும் ஏசி அல்லாத இருக்கைகள், மற்றும் படுக்கைகள் கணிசமாகக் குறைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 2023-24ஆம் ஆண்டுக்கான இந்திய ரயில்வே ஆண்டறிக்கையுடன் 2013-14ஆம் ஆண்டுக்கான அறிக்கையை ஒப்பிட்டு தொலைதூர ரயில்களின் இருக்கைகள், பெட்டிகள் குறித்த தரவுத் தொகுப்பை தி இந்து ((The Hindu)) ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது.
இந்த பத்தாண்டுகளில் இந்திய ரயில்களின் மொத்த இருக்கைகள் மற்றும் படுக்கைகளில் ஏசி அல்லாத பெட்டிகளில் உள்ளவற்றின் பங்கு 82 விழுக்காட்டிலிருந்து 68 விழுக்காடாகக் குறைந்துள்ளது. ஏசி பெட்டிகளில் உள்ள இருக்கைகள் மற்றும் படுக்கைகளின் பங்கு 16 விழுக்காட்டிலிருந்து 32 விழுக்காடாக அதிகரித்துள்ளது. இந்திய ரயில்வே பல சாதாரண பெட்டிகளை மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளாக மாற்றிவருவதாகக் கூறப்படுகிறது. மூன்றாம் வகுப்பு ஏசி பெட்டிகளில் பயணிப்போரின் எண்ணிக்கையும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளதாக இந்த தரவுத் தொகுப்பு தெரிவிக்கிறது.