\
Noel Tata's Exit: New Leaders and Tata Sons Controversy
Noel TataANI

நோயல் டாடா ஓய்வு.. அடுத்தடுத்து மாறும் தலைவர்கள்.. டாடா குழுமத்தில் புதிய சிக்கல்?

நோயல் டாடாவின்(Noel Tata) ஓய்வைத் தொடர்ந்து டாடா குழுமத்தில் அதிரடி தலைமை மாற்றங்கள் அரங்கேறியுள்ள நிலையில், டாடா சன்ஸின்(Tata Sons) ஒப்புதல் பெறப்படாதது இரு தரப்புக்கும் இடையிலான அதிகாரப் போட்டியை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது!
Published on: 

செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்

நோயல் டாடா, டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் தலைவர் பதவியிலிருந்து தற்போது ஓய்வு பெறுகிறார். டாடா குழுமத்தின் விதிகளின்படி, நிர்வாகப் பொறுப்பில்லாத இயக்குநர்கள் 70 வயதில் ஓய்வு பெற வேண்டும். இதையடுத்து, அடுத்த தலைவர்கள் யார்? ஏற்கெனவே டாடா சன்ஸ் உடன் இருக்கும் சர்ச்சையில், இந்த நியமனங்களுக்கு அவர்களிடம் ஒப்புதல் கேட்கப்பட்டதா? விரிவாகப் பார்க்கலாம்.

நோயல் டாடாவுக்கு(Noel Tata) இந்த மாதம் 70 வயது எட்டியுள்ளதால், அவர் டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார். 2004 ஜூன் 9 அன்று நிறுவனத்தின் குழுவில் இணைந்த அவர், 2010 ஜூன் 24 அன்று தலைவரானார். 16 ஆண்டுகளாகத் தலைவர் பதவியில் இருந்த அவர், தற்போது ’கௌரவத் தலைவராக’ (Chairman Emeritus) நியமிக்கப்பட்டுள்ளார். டாடா அறக்கட்டளைகளின் தலைவராகவும், டாடா சன்ஸில் அறக்கட்டளைகளின் பிரதிநிதி இயக்குநராகவும் அவர் தொடர்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ட்ரென்ட் (Trent), வோல்டாஸ் (Voltas), டாடா இன்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்களின் தலைவர் பதவிகளிலிருந்தும் நோயல் டாடா விலகுகிறார்.

Noel Tata
Noel TataPTI

"அவரது தலைமையின் கீழ் நிறுவனம் முக்கிய மைல்கற்களை எட்டியது; பங்குதாரர்களுக்குத் தொடர்ச்சியான வளர்ச்சியையும் மதிப்பையும் வழங்கியது" என்று அவரது தலைமையையும் வழிகாட்டுதலையும் நிறுவனம் பாராட்டியுள்ளது.

மறுபுறம், டாடா இன்வெஸ்ட்மென்டின் புதிய தலைவராக பஹ்ராம் வகீல் நவம்பர் 12 முதல் பதவியேற்கிறார் என்று நிறுவனம் ஒழுங்குமுறைத் தாக்கல் (regulatory filing) மூலம் தெரிவித்துள்ளது. 

யார் இந்த பஹ்ராம் வகீல்?

டாடா இன்வெஸ்ட்மென்டின் புதிய தலைவராக பஹ்ராம் வகீல் (Bahram Vakil) நவம்பர் 12 முதல் பதவியேற்கிறார் என்று நிறுவனம் ஒழுங்குமுறைத் தாக்கல் (regulatory filing) மூலம் தெரிவித்துள்ளது.

புதிய தலைவராகப் பொறுப்பேற்கும் பஹ்ராம் வகீல், AZB & Partners சட்ட நிறுவனத்தின் இணை நிறுவன பங்காளர்களில் ஒருவர்; கார்ப்பரேட் சட்ட வழக்கறிஞர். பல ஆண்டுகளாக டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷனுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். 2026 மார்ச்சில் இந்நிறுவனத்தின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். இவர் தலைவராவதன் மூலம், நோயல் டாடாவின் நீண்டகாலத் தலைமை நிறைவடைகிறது.

Noel Tata's Exit: New Leaders and Tata Sons Controversy
Noel Tata's Exit: New Leaders and Tata Sons ControversyANI

NeoStrat Advisors LLP நிறுவனத்தின் நிறுவனர் அபிஸர் ஷப்பீர் திவான்ஜியை, நிர்வாகப் பொறுப்பில்லாத கூடுதல் சுயேட்சை இயக்குநராக ஐந்து ஆண்டுகளுக்கு நிறுவனம் நியமித்துள்ளது. நிதிச் சேவைகள், மறுசீரமைப்புத் துறையில் ஏறத்தாழ இரண்டு தசாப்த அனுபவம் கொண்டவர் அவர்.

மற்ற நிறுவனங்களிலும் தலைமை மாற்றம் நடந்துள்ளது. ட்ரென்ட் நிறுவனத்தின் தலைவராக பஹ்ராம் வகீல் நியமிக்கப்பட்டுள்ளார். வோல்டாஸ் நிறுவனத்துக்கு சுனில் டி'சூசா தலைமை தாங்குவார். டாடா ஸ்டீல் நிர்வாக இயக்குநர் டி.வி. நரேந்திரன் டாடா இன்டர்நேஷனலின் தலைவராகப் பொறுப்பேற்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகைய தலைமை மாற்றங்களுக்கு மத்தியில்தான் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இதுவரை டாடா குழும நிறுவனங்களின் தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகப் பொறுப்புகளுக்கான நியமனங்கள் குறித்து தாய் நிறுவனமான டாடா சன்ஸிடம் ஒப்புதல் பெறுவது வழக்கமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள நியமனங்களுக்கு முன்பாக டாடா சன்ஸின் ஒப்புதல் பெறப்படவில்லை எனவும் இதனால் டாடா சன்ஸ் நிர்வாகம் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Noel Tata's Exit: New Leaders and Tata Sons Controversy
Noel Tata's Exit: New Leaders and Tata Sons ControversyANI

டாடா அறக்கட்டளைகளின் தலைவரான நோயல் டாடாவுக்கும், டாடா சன்ஸ் தலைவரான என்.சந்திரசேகரனுக்கும் இடையே ஏற்கெனவே நிர்வாகம் மற்றும் தலைமை தொடர்பாக கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் இந்நிலையில், புதிய தலைவர்கள் நியமனத்தில் ஏற்பட்டுள்ள இந்த விவகாரம் இருதரப்புக்கும் இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.