கைலாஷ் சத்யார்த்தியின் நோபல் பரிசு சான்றிதழ் திருட்டு
குழந்தைகள் நல ஆர்வலர் கைலாஷ் சத்யார்த்தியின் டெல்லி வீட்டில் புகுந்த திருடர்கள், அவரது வீட்டிலிருந்த நோபல் பரிசு சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய பொருட்களைத் திருடிச் சென்றனர்.
சமூக ஆர்வலரும், குழந்தைகள் நல ஆர்வலருமான கைலாஷ் சத்யார்த்தி தெற்கு டெல்லியின் அலக்நந்தா பகுதியில் வசித்து வருகிறார். அந்த வீட்டின் கதவை உடைத்து நள்ளிரவில் புகுந்த திருடர்கள் பல்வேறு பொருட்களைத் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து சத்தியார்த்தியின் மகனும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான புவன் ரிபு காவல்துறையில் புகார் அளித்தார்.
இதனிடையே கைலாஷ் சத்தியார்த்தியின் நோபல் பரிசுப் பதக்கம் திருடு போய்விட்டதாக செய்தி பரவியது. இது குறித்து விளக்கமளித்துள்ள சத்தியார்த்தி அலுவலகம், கைலாஷ் சத்யார்த்தி, தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசினை நாட்டுக்கு அர்ப்பணித்துள்ளதால், நோபல் பரிசுப் பதக்கம் தற்போது குடியரசுத்தலைவர் மாளிகையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், அது திருடு போகவில்லை என்றும் விளக்கமளித்துள்ளது. குழந்தைகள் உரிமைக்காகப் போராடிவரும் கைலாஷ் சத்யார்த்திக்கும், பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்கும் 2014ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.