கழிவறை கட்டித் தராத மாமனார் மீது மருமகள் போலீசில் புகார்!
கழிவறை கட்டித்தராத மாமனார் மீது போலீசில் மருமகள் கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் முஸாபர்புர் மாவட்டத்தில் உள்ள செங்கன் நியூரா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் இளம் பெண் ஒருவர். இவருக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. கணவர் தமிழ்நாட்டில் வேலை பார்த்துவருகிறார். இந்நிலையில் தனது மாமனாரிடம் கழிவறை கட்டித்தரும்படி தொடர்ந்து கேட்டு வந்துள்ளார். இதையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் வந்துள்ளது. இதனால், கணவர் ஊருக்கு வந்தால் மட்டுமே மாமனார் வீட்டுக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்தார் அந்தப் பெண். மற்ற நாட்களில் தனது தாய் வீட்டில் தங்கியுள்ளார்.
இது தொடர்ந்து கொண்டே இருந்ததால், பல முறை கேட்டும் கழிவறை கட்டித் தராத தனது மாமனார் மீது போலீசில் புகார் செய்தார். இதையடுத்து முஸாபர்புர் பெண் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.