“ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை” - முதல்வர் குமாரசாமி
கர்நாடகாவில் தமது ஆட்சிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என முதலமைச்சர் குமாரசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
224 உறுப்பினர் கொண்ட கர்நாடக சட்டப்பேரவையில் 37 உறுப்பினர்களைக் கொண்ட மதசார்பற்ற ஜனதாதள கட்சியும் 80 உறுப்பினர் ஆதரவுள்ள காங்கிரசும் கூட்டணி ஆட்சி நடத்தி வருகின்றன. பாரதிய ஜனதா கட்சி 104 உறுப்பினர்களுடன் தனிப்பெருங்கட்சியாக உள்ளது. குமாரசாமி தலைமையிலான அரசில் சிவக்குமார் நீர் வளத்துறை அமைச்சராக இருக்கிறார்.
இந்நிலையில், கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க ஆபரேஷன் லோட்டஸ் என்ற பெயரில் முயற்சிகள் நடந்து வருவதாகவும் இதற்காக காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் பாஜக குதிரை பேரத்தில் ஈடுபட்டிருப்பதாகவும் அம்மாநில அமைச்சர் சிவக்குமார் குற்றஞ்சாட்டியிருந்தார்.
கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 3 பேர் மும்பையில் பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் சிலருடன் தங்கியிருப்பதாக சிவக்குமார் தெரிவித்தார். ஆட்சிக்கவிழ்ப்பு குறித்து தனக்குத் தெரிந்த தகவல்களை குமாரசாமி வெளிப்படையாக கூறுவதில்லை என்றும் சிவக்குமார் தெரிவித்தார். இதைப்பார்க்கும்போது குமாரசாமி பாஜக பக்கம் சாய்கிறாரோ என்று தோன்றுவதாகவும் அமைச்சர் குற்றம் சாட்டினார்.
இதற்கு முதலமைச்சர் குமாரசாமி மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் பேசியபோது, “கர்நாடகாவில் தமது ஆட்சிக்கு எவ்வித ஆபத்தும் இல்லை. பாஜகவுடன் சேர்வதாக கூறப்பட்ட 3 காங்கிரஸ் எம்எல்ஏக்களும் தன்னிடம் தெரிவித்துவிட்டுதான் மும்பை சென்றனர். அவர்கள் தன்னுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர்” என குமாரசாமி தெரிவித்தார்.
மேலும், “பாஜக என்னென்ன முயற்சிகளை மேற்கொள்கிறது. எவ்வளவு பேரம் பேசுகிறது என்பது எல்லாம் எனக்கு தெரியும். அதை கையாண்டு கொள்கிறேன்” எனத் தெரிவித்தார்.