அதிகரித்த குளிர்: பசுக்களுக்கு கோணிப்பை ஸ்வெட்டர்

அதிகரித்த குளிர்: பசுக்களுக்கு கோணிப்பை ஸ்வெட்டர்
அதிகரித்த குளிர்: பசுக்களுக்கு கோணிப்பை ஸ்வெட்டர்

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் இறைச்சிக்காக மாடுகளை விற்பனை செய்யவும், இறைச்சிக் கூடங்களை நடத்தவும் தடை விதித்தார். இதனால் நலிவடைந்திருந்த மாட்டிறைச்சி ஏற்றுமதி தொழில், மேலும் வீழ்ச்சியை சந்தித்தது. மாடுகளை இறைச்சிக்காக விற்பனை செய்ய இயலாத நிலையில், பராமரிக்க முடியாத விவசாயிகள் வீதிகளில் அவிழ்த்து விட்டனர். 

அரசுக்கு அதிருப்தியை தெரிவிக்கும் விதமாக, வீதிகளில் சுற்றித் திரிந்த கால்நடைகளை அருகில் உள்ள அரசு பள்ளி வளாகங்களில் சிலர் கட்டி வைத்தனர். இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மாநிலம் முழுவதும் வீதிகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை காப்பகங்களில் அடைக்க உத்தரவிட்ட யோகி ஆதித்யநாத், கோசாலைகளை நிறுவ 612 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கினார். 

பனிக்காலம் தொடங்கியுள்ள நிலையில், கோசாலைகளில் அடைக்கப்பட்டுள்ள பசுக்கள், கடும் குளிரால் அவதிப்பட்டன. இதையடுத்து பசு மாடுகளுக்கு ஸ்வெட்டர் வழங்கப்படும் என உத்தரப்பிரதேச அரசு அதிரடியாக அறிவித்தது. முதற்கட்டமாக அயோத்தி கோசாலைகளில் உள்ள பசுக்கள் மற்றும் காளைகளுக்கு சணலால் ஆன ஸ்வெட்டர் வழங்கப்பட்டுள்ளது.

அரசின் இந்த நடவடிக்கைக்கு மாநில காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. குளிரில் வாடும் பள்ளி மாணவிகளுக்கு ஸ்வெட்டர் வாங்கிக்கொடுக்காத அரசு, மாடுகளுக்கு ஸ்வெட்டர் கொடுத்துள்ளதாக விமர்சித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com