ரயிலில் சிவனுக்கு இருக்கை ஒதுக்கீடா?: விளக்கம் அளித்த ஐ.ஆர்.சி.டி.சி
காசி மஹாகால் விரைவு ரயிலில் சிவனுக்கு படுக்கை வசதி ஒதுக்கப்படவில்லை என ஐ.ஆர்.சி.டி.சி விளக்கம் அளித்துள்ளது.
வாரணாசி, உஜைன் மற்றும் இந்தூர் ஆகிய இடங்களில் உள்ள சிவன் தலங்களை இணைக்கும் வகையில், ஐ.ஆர்.சி.டி.சி. சார்பில் இயக்கப்படும் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். வாரத்துக்கு 3 நாட்கள் இயக்கப்படும் இந்த ரயிலில், சிவனுக்காக பி-ஐந்தாவது கோச்சில், 64-வது இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் பரவின. இது தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் பரவியதால் இந்த விவகாரத்தில் சர்ச்சை எழுந்தது
இந்நிலையில் ரயிலில் சிவனுக்கு படுக்கை வசதி ஒதுக்கப்படவில்லை என ஐ.ஆர்.சி.டி.சி விளக்கம் அளித்துள்ளது. ரயிலின் தொடக்க ஓட்டம் எந்த தடங்கலும் இல்லாமல் தொடர சிவன் புகைப்படத்தை வைத்து பூஜை செய்யப்பட்டது என தெரிவித்துள்ளது.
இந்த ரயில் லக்னோ வழியாக 1,131 கிலோமீட்டர் தூரத்தையும், ப்ரயாக்ராஜ் வழியாக 1,102 கிலோ மீட்டர் தூரத்தையும் 19 மணி நேரத்தில் கடக்கும். குறைவான சத்தத்தில் சாமி பாடல்கள், பாதுகாவலர்கள், சைவ உணவு, ஏசி வகுப்புகள் என இந்த ரயிலில் பல சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளன. வாரத்திற்கு 3 நாட்கள் இந்த ரயில் இயக்கப்பட உள்ளது.