பாஜக அழுத்தத்தால் குஜராத் தேர்தல் அறிவிப்பில் தாமதமா?: தேர்தல் ஆணையர் விளக்கம்
குஜராத் சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிடுவதில் மத்திய அரசு தரப்பில் தங்களுக்கு எந்த அழுத்தமும் தரப்படவில்லை என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஏ.கே. ஜோதி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஆளும் கூட்டணியின் சொல்படி தேர்தல் ஆணையம் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் கூறும் புகாரில் உண்மையில்லை என்று கூறியுள்ளார். மேலும், எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் முன்னுரிமை தரப்படவில்லை என்ற ஜோதி, அரசியல் கட்சிகளின் பரப்புரைகள் குறித்து தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்வதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வரும் வரை, அரசியல் கட்சிகள் அளிக்கும் தேர்தல் வாக்குறுதிகள், அறிவிக்கும் திட்டங்களில் தேர்தல் ஆணையம் தலையிடுவதில்லை என்றும் ஜோதி கூறியுள்ளார். குஜராத்தில் பிரதமர் மோடியின் பயணத்தை முன்னிட்டே, அங்கு பேரவைத் தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் தாமதம் செய்வதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் விளக்கம் அளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரத்தில் குஜராத்திற்கு வருகை தர உள்ளார். அப்போது சில அறிவிப்புகளை வெளியிட உள்ளார் என்று கூறப்படுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் மோடியால் எந்த அறிவிப்பையும் அறிவிக்க முடியாது. அதனால் மோடியின் வருகைக்காக தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிடாமல் தாமதம் செய்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகிறது.