”தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு எப்படி இருக்கிறது?”- உ.பி உடன் ஒப்பிட்டு ஊடகவியலாளர் ஜென்ராம் விளக்கம்
உத்தரப் பிரதேச முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் 2017ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்டதில் இருந்து இன்றுவரை 10,700க்கும் மேற்பட்ட என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி அனைவரையும் பெரும் அதிர்ச்சியாக்கியுள்ளது.
உ.பியில் இரண்டாவது முறை முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யோகி ஆதித்யநாத் ஆட்சியில் நடத்தப்பட்ட என்கவுன்டர்களில் உ.பி காவல்துறை தரவுகளின்படி கடந்த 6 ஆண்டுகால ஆட்சியில் 183 குற்றவாளிகள் என்கவுன்டர்களில் கொல்லப்பட்டதாக காவல்துறை சிறப்பு இயக்குநர் ஜெனரல் சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தார்.
உத்தரப் பிரதேசத்தில் ஒவ்வொரு 13 நாட்களுக்கும் குறைந்தது ஒரு குற்றவாளியாவது காவல்துறையால் என்கவுன்டரில் கொல்லப்பட்டதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த என்கவுன்டர்களில் 5,967 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டதாகவும், 1,708 குற்றவாளிகள் காயமடைந்ததாகவும் உத்தரப் பிரதேச காவல்துறை கூறியுள்ளது.
இந்த நடவடிக்கை உ.பியின் சட்டம் ஒழுங்கு நிலைமையை வலுப்படுத்த மற்றும் சமூக விரோதிகளுக்கு எதிரான கடுமையான அடக்குமுறையாக எடுத்துக்கொண்டாலும் பலரை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அதேவேளையில் இந்த என்கவுன்டர்களில் பல ‘போலி’யானவை என்று எதிர்க்கட்சிகளும் பொதுநல அமைப்புகளும் குற்றஞ்சாட்டியுள்ளன.
இத்தகைய சூழலில் பல பேர்களை என்கவுன்டரில் கைதுசெய்து வந்தாலும் இது மட்டுமல்லாமல் காவல் துறையினரின் முன்பே, முன்னாள் எம்.பி அத்திக் அகமது மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்கள் ‘ஜெய் ஸ்ரீராம்’ எனக் கூறிக்கொண்டு சுட்டுக்கொன்றது விவாதப்பொருளாக மாறியது. ஆனால், இக்கொலைகளுக்குப் பின்னால் உ.பி. காவல்துறை இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டியிருந்தனர்.
என்கவுன்டரால் கொல்லப்பட்டவர்களில் விகாஸ் துபே, ஆசாத் அகமது போன்ற பெரும் குற்றவாளிகளாகவும் உள்ளனர். தேசிய தலைப்புச் செய்திகளாக மாறிய ஐந்து முக்கிய உத்தரப் பிரதேச காவல்துறையின் என்கவுன்டர்களின் பட்டியலை எடுத்துக்கொண்டால், அணில் துஜானா என்ற பிரபல கேங்ஸ்டர் சுட்டுக் கொல்லப்பட்டது உள்ளிட்ட செய்திகள் அடங்கும். இந்த நிலையில் பல முக்கிய நபர்கள் பல்வேறு முறைகளில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இந்தச் சூழ்நிலை, அம்மாநிலத்தின் சட்ட ஒழுங்கையுமே வெளிக்காட்டுகிறது. ஆனால், அம்மாநில உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் பேசிய யோகி ஆதித்யநாத், ”உத்தரப் பிரதேசத்தில் தலைவிரித்து ஆடிக்கொண்டிருந்த மாஃபியாக்களை பாஜக அரசு கட்டுப்படுத்தியுள்ளது. இதுதான் எங்களின் 6 ஆண்டு சாதனை" என்று பெருமிதம் பொங்க தெரிவித்திருந்தார்.
இதேபோல், தமிழ்நாட்டிலும் சட்டம் - ஒழுங்கு பிரச்னை நிலவி வருவதாக பல்வேறு கொலை சம்பவங்கள், காவல்துறையினரின் தற்கொலைகள் போன்றவற்றை சுட்டிக் காட்டி எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதுகுறித்து, ’சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிப்பதால் தலைகுனிவு’ என எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., விமர்சித்துள்ள நிலையில், காவல்துறையை எச்சரிக்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தலையும் வழங்கியிருந்தார். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்னை குறித்து புதிய தலைமுறையின் நேர்படப் பேசு விவாத நிகழ்ச்சியில் மூத்த ஊடகவியலாளர் ஜென்ராம் பங்கேற்றார்.
அப்போது பேசிய அவர், “நான் எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டையும் பொருட்படுத்தவில்லை, முதல்வர் கொடுத்துள்ள பதில் உரையையும் பொருட்படுத்தவில்லை . இருவரின் சட்டம் - ஒழுங்கு பார்வையிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறேன். வளர்ந்து வரும் சமூகத்தில் குற்றச்செயல்கள் நடக்கத்தான் செய்யும்.
இதற்கு விதிவிலக்கான மாநிலங்கள் என எந்த மாநிலமும் இல்லை. தமிழ்நாட்டில் காவல்துறை கைதுசெய்த பிறகு வண்டியை மறித்து யாரும் கொலை செய்யப்படுவதில்லை. வேறுவேறு மதங்களைச் சார்ந்தவர்கள் சேர்ந்து பழகுகிறார்கள் என்றால், அவர்களைத் தாக்கவில்லை. அந்த மாதிரியான வன்முறைகள் இங்கு இல்லை. தமிழ்நாட்டில் முன்விரோதம் போன்றவைதான் இங்குள்ள குற்றச்சாட்டுகளுக்குக் காரணமாக இருக்கின்றன. வெறுப்பை விதைக்கக்கூடிய குற்றங்கள் தமிழ்நாட்டில் நடைபெறுவதில்லை. சட்டப்பிரிவு 21 சொல்வது ஒவ்வோர் உயிரும் முக்கியமானது.
உ.பியில் காவல்துறையினர் கைதிகள் இரண்டு பேரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலே அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள். அந்தச் சிறைக் கைதியாக இருந்து இறந்தவரின் மகன் 2-3 நாட்களுக்கு முன்பு என்கவுன்டர் செய்யப்படுகிறார். அப்படியெனில், எந்தச் சட்டத்தை அந்த அரசாங்கம் கடைப்பிடிக்கிறது.
சட்டங்களை மதித்து நடக்கிற அரசுதான் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்கிறது. குற்றஞ்சாட்டப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த உடனேயே, குற்றவாளியின் வீட்டை வாகனத்தைக் கொண்டு இடிக்கக்கூடிய சட்டம் - ஒழுங்கு தேவையில்லை. அதுபோக காவல்துறைக்குக் கட்டுக்கடங்காத சுதந்திரம் கொடுக்கவேண்டும் என்று சொல்வதும் அரசியலமைப்பில்கூட இடம்பெற்றில்லை.
காவல்துறை அரசினுடைய கட்டுப்பாட்டில்தான் இருக்கவேண்டும். உங்களுடைய அரசியலுக்குக் காவல்துறையைப் பயன்படுத்தக் கூடாது. ஆனால், அவர்களுக்கு முழுச் சுதந்திரம் கொடுப்பது ஜனநாயகத்திற்கே விரோதமானது. அவை அரசுக்குத்தான் கட்டுப்பட்டு இருக்கவேண்டும்” என்றார்.