" ஓராண்டுக்கு புதிய திட்டம் ஏதும் இல்லை" - மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு !
அடுத்த ஓராண்டுக்கு எந்தவிதமான அரசின் புதிய திட்டங்களும் கிடையாது என்று மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தைக் கடந்துள்ளது. மேலும் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் நோக்கோடு 4 கட்ட ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் பல்வேறு துறைகளும் முடங்கிப் போயின. மேலும் நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்பிலிருந்து மீள்வதற்குப் பலவிதமான பொருளாதார சலுகைகளை மத்திய நிதி அமைச்சர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டார்.
அதில் கொரோனா வைரசால் இழப்பைச் சந்தித்துள்ள இந்தியப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க மத்திய அரசு ரூ. 20.97 லட்சம் கோடி நிதி சீர்திருத்தத் திட்டத்தை அறிவித்தது. இந்திய ரிசர்வ் வங்கியிடமுள்ள சுமார் 8.01 லட்சம் கோடி ரூபாய் நிதியும் அடக்கியே, இந்த நிதித் தொகுப்பை அறிவித்தது மத்திய அரசு.
இந்நிலையில் அடுத்த ஓராண்டுக்கு எந்தவிதப் புதிய அரசாங்கத் திட்டங்களும் அறிமுகம் செய்யப்படாது என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது குறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், " கொரோனா தொற்று காரணமாக அரசிடம் இருக்கும் பொது நிதியைப் பயன்படுத்துவதில் மாற்றங்கள் செய்வது கட்டாயமாகியுள்ளது. தொடர்ந்து ஏற்பட உள்ள மாற்றங்களுக்கு ஏற்றாற்போல நிதிப் பங்கீடுகளில் மாற்றம் செய்யப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.