கர்நாடகாவில் அனைத்து பெண் போலீஸுக்கும் பேண்ட், சர்ட் - புதிய உத்தரவு
கர்நாடகாவில் அனைத்து பெண் காவலர்களும் பேண்ட் மற்றும் சட்டை உடுத்த வேண்டும் என டிஜிபி நீலமணி ராஜூ புதிய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கர்நாடக காவல்துறையை பொறுத்தவரையில் கான்ஸ்டபிள் போன்ற அடிமட்ட பதவியிலிருக்கும் பெண் காவலர்கள் புடவை மற்றும் சுடிதார் உடுத்த வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. இப்படி உடை அணிவதால், செயின் திருடர்களை பிடிப்பது, கூட்டத்தை கலைக்கும் நேரத்தில் தடியடி நடத்துவது, போராட்டத்தில் ஈடுபடுவபர்களை கைது செய்யும் போது ஏற்படும் தள்ளு முள்ளு உள்ளிட்ட நேரங்களில் சிக்கல் ஏற்படுவதாக குறைகள் கூறப்பட்டது. இதுபோன்ற சமயங்களில் பெண் காவலர்களால் முழு வேகத்தில் இயங்க முடியவில்லை என்று புகார்கள் எழுந்தன.
ஆனால் அடிமட்ட பெண் காவலர்கள் தவிர, பொறுப்பிலும், உயரதிகாரியாகவும் இருக்கும் பெண் காவலர்கள் பேண்ட் மற்றும் சட்டை அணியும் நடைமுறை அங்கு உள்ளது. இந்த நடைமுறையை மாற்றி அனைத்து பெண் காவலர்களும் பேண்ட் மற்றும் சட்டை அணியும் புதிய முறையை கொண்டு வர கர்நாடக காவல்துறை ஆலோசித்தது. இதுதொடர்பாக அம்மாநில டிஜிபி நீலமணி ராஜூ கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி பெண் காவல் அதிகாரிகள் உட்பட அனைத்து தரப்பு காவல்துறையினருடனும் ஆலோசனை நடத்தினார். அக்டோபர் 16ஆம் தேதி இதுதொடர்பாக ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இதைத்தொடர்ந்து சில உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அவர், தற்போது புதிய உத்தரவை பெண் காவலர்களுக்கு பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவின்படி, பெண் காவலர்கள் அனைவருமே பேண்ட் மற்றும் சட்டை உடுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் முடியை ஸ்டைலாக வைத்துக்கொள்ளமால், ஜடை போட்டுக்கொள்ளமால் காவல்துறையின் முறையில் கடைபிடிக்கப்படும் கொண்டை தான் போட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தலையில் பூ வைத்துக்கொள்ளவும் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கம்மல் உடுத்த விரும்பினால், தொங்கும் ரகத்தில் இல்லாமல் சிறிய ரக கம்மலை உடுத்தலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. சில பண்டிகை நாட்களில் வேண்டுமானால் புடவை அணிந்துகொள்ளலாம் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.