பெரும்பான்மை இல்லை : ஆனாலும் ஹரியானாவில் ஆட்சியமைக்கும் பாஜக ?

பெரும்பான்மை இல்லை : ஆனாலும் ஹரியானாவில் ஆட்சியமைக்கும் பாஜக ?
பெரும்பான்மை இல்லை : ஆனாலும் ஹரியானாவில் ஆட்சியமைக்கும் பாஜக ?

ஹரியானாவில் ஆட்சியமைப்பதற்கு உரிமை கோர பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகள் வெளிவந்துள்ளன. இதில் ஹரியானா மாநிலத்தில் எந்தக் கட்சிக்கு ஆட்சியமைக்கும் வகையில் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் உள்ள 90 இடங்களில் 30 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. 10 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. காங்கிரஸ் 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 9 இடங்களில் வெற்றி பெறும் நிலையில் உள்ளது. 

இதுதவிர ஜனநாயக ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் சுயேட்சைகள் 5 இடங்களில் வெற்றியும், 2 இடங்களில் வெற்றி பெறும் நிலையிலும் உள்ளனர். மேலும், இந்திய தேசிய லோக் தளம் ஒரு இடத்தை கைப்பற்றியுள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் ஹரியானாவில் ஆட்சியமைக்க 46 சட்டமன்ற உறுப்பினர்களில் எண்ணிக்கை வேண்டும். இதில் 40 பாஜக வசம் உள்ளது. காங்கிரஸ் வசம் 31 உள்ளது. இதனால் ஜனநாயக ஜனதா கட்சியின் 10 இடங்கள் பாஜகவிற்கு கிடைத்தால் அதன் ஆட்சி உறுதியாகிவிடும். 

அதேசமயம் காங்கிரஸ் ஆட்சியமைக்க வேண்டுமென்றால், ஜனநாயக ஜனதா கட்சியின் ஆதரவு மட்டுமின்றி சுயேட்சைகளின் ஆதரவையும் பெற வேண்டும். இந்நிலையில் அதிக இடங்களை பெற்ற கட்சி என்ற முறையில் பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் பாஜகவின் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா, தனது ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், “கடந்த 5 வருடங்களாக மோடியின் மத்திய அரசு தலமையிலான கட்டார் அரசு ஹரியானாவில் மக்கள் நலனுக்கான ஆட்சியை நடத்தி வந்தது. தற்போது பாஜகவை அதிக எண்ணிக்கை கொண்ட கட்சியாக மக்கள் வெற்றிபெற வைத்ததற்கும், மறுபடியும் சேவை செய்ய வாய்ப்பளித்ததற்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com