குஜராத்தில் உலகின் மிக உயர சிலை திறப்பு விழா.. தமிழக அமைச்சர்கள் பங்கேற்பு
உலகின் மிக உயர பிரம்மாண்ட சிலை குஜராத்தில் சர்தார் வல்லபாய் படேலுக்கு இன்று திறக்கப்படும் நிலையில் தமிழகம் சார்பில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன் பங்கேற்றுள்ளனர்.
உலகின் மிக உயரமான சிலையாக உருவாக்கப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேலின் சிலையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் படேல் சிலையின் மொத்த உயரம் 787 அடி. சிலை அமைந்துள்ள பீடத்தின் உயரம் மட்டும் 190 அடி ஆகும்.
பிரதமர் மோடி சிலையை திறந்துவைக்கும் நிலையில் அவருடன் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா, மத்திய பிரதேச ஆளுநர் அனந்திபென் படேல் மற்றும் கர்நாடகா ஆளுநர் வஜூபாய் வாலா ஆகியோர் மட்டுமே பங்கேற்கின்றனர். தமிழகத்தின் சார்பில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, மாஃபா பாண்டியராஜன் பங்கேற்கின்றனர்.
இதுகுறித்து குஜராத்தின் துணை முதலமைச்சர் நிதின் படேல் கூறும்போது மற்ற மாநில தலைவர்கள் அவர்களின் வசதிக்கு ஏற்ப நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சிலையை வந்து காணலாம் என தெரிவித்துள்ளார்.
இதனிடையே சிலையை காண வரும் அரசியல் தலைவர்களுக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து அரசியல் ரீதியாக அதனை பயன்படுத்திக் கொள்ள பாஜக முயற்சிப்பதாக கூறப்படுகிறது. அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பாஜக இந்த திட்டத்தை வகுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.