ஹூபே மாகாணத்தில் உள்ள 600 இந்தியர்களிடம் தொடர்பில் இருக்கிறோம் -இந்திய வெளியுறவுத்துறை
சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள இந்தியர்கள் யாரும் கொரனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவில் ஆயிரக்கணக்கானோருக்கு பரவியிருக்கும் கொரனா வைரஸ் அங்கு நூற்றுக்கும் மேற்பட்டோரை கொன்று உலகையே பதட்டத்தில்உறைய வைத்திருக்கிறது. 19 நாடுகளில் பரவியிருக்கும் கொரனா, மாணவி ஒருவர் மூலம் இந்தியாவிற்குள்ளும் நுழைந்து நாட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
சீனாவில் இருந்து கேரளா வந்த நான்கு பேருக்கு கொரனா வைரஸ் அறிகுறி இருந்த நிலையில் அவர்கள் நால்வரும் திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒரு மாணவிக்கு கொரனா வைரஸ் தாக்குதல் உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர் உடல்நலம் தேறி வருவதாக கூறியுள்ளது கேரள அரசின் சுகாதாரத்துறை. இந்நிலையில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள இந்தியர்கள் யாரும் கொரனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக தகவல் இல்லை என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய வெளியுறவுத்துறை, சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள இந்தியர்கள் யாரும் கொரனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக தங்களிடம் உறுதியான தகவல் இல்லை எனக் கூறியுள்ளது. சீனாவில் கொரனா வைரஸால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள ஹூபே மாகாணத்தில் உள்ள 600 இந்தியர்களை தொடர்பு கொண்டுள்ளதாகவும், அவர்கள் நாடு திரும்ப விரும்புகிறார்களா என கேட்டு வருவதாகவும் வெளியுறவுத்துறை கூறியுள்ளது.