அணு உலைகளை மூடும் எண்ணம் இல்லை: அமைச்சகம் அறிவிப்பு
அணு உலைகளை மூடும் எண்ணம் இல்லை என்று மத்திய அணுசக்தித்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
நாட்டில் இயங்கும் எந்த அணு உலையையும் மூடும் எண்ணம் தற்போது கிடையாது என அணு சக்தித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 22 அணு உலைகள் மூலம் 6780 மெகா வாட் மின்சாரம் தயாரிக்கப்படுவதாக அணு சக்தித்துறை அமைச்சகம் கூறியுள்ளது. மேலும் 21 அணு உலைகளை தொடங்க திட்டமிட்டிருப்பதாகவும், அதற்கான வரைவுப்பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் அமைச்சகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் துறையின் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வருகிறது. 2017 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட கணக்கெடுப்பின்படி, அனல் மின் நிலையங்கள் மூலம் ஆண்டுக்கு 2,20,569.88 மெகாவாட் மின்சாரமும், அணு உலைகள் மூலம் 6,780 மெகாவாட்டும், காற்றாலை மின்சாரம் மூலம் 44,594.42 மெகாவாட் மின்சாரமும், மற்ற புதுப்பிக்கத்தக்க முறைகளான சோலார், பயோ கேஸ் உள்ளிட்டவைகளின் மூலமாக 57,260.23 மெகாகாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. மொத்தமாக 3,29,204.53 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் அணு உலைகள் மூலம் வெரும் 2 சதவீதம் மட்டுமே உற்பத்தி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.