மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கடிதம்
மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர வேண்டுமென, மக்களவையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பில் மீண்டும் கடிதம் தரப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு மறுத்தாகக்கூறி, அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் முடிவு செய்து, கடந்த இரு நாள்களுக்கு முன்பாக கடிதம் அளித்தது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற மக்களவை அலுவலில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை சேர்க்க கோரி ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி எம்பி சுப்பாரெட்டி மக்களவை செயலருக்கு நோட்டீஸ் அளித்திருந்தார். ஆனால், அன்றைய தினம் தீர்மானம் கொண்டுவரப்படவில்லை.
இதைத்தொடர்ந்து, இன்றைய அவை அலுவலில், நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டுவரக்கோரி சுப்பாரெட்டி மீண்டும் கடிதம் அளித்துள்ளார். அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர குறைந்தது 50 எம்பிக்களின் ஆதரவு தேவை. ஆனால் ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கு 9 எம்பிக்களே உள்ளனர். எனவே பிற கட்சிகளின் ஆதரவை பெற்று தீர்மானத்தை கொண்டு வர ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தீவிரமாக உள்ளது.