வாக்குச் சீட்டு முறையிலான தேர்தலுக்கு 'சான்ஸே இல்லை' - முன்னாள் தேர்தல் ஆணையர் சம்பத்

வாக்குச் சீட்டு முறையிலான தேர்தலுக்கு 'சான்ஸே இல்லை' - முன்னாள் தேர்தல் ஆணையர் சம்பத்
வாக்குச் சீட்டு முறையிலான தேர்தலுக்கு 'சான்ஸே இல்லை' - முன்னாள் தேர்தல் ஆணையர் சம்பத்

வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை என முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் விஎஸ் சம்பத் தெரிவித்துள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்பதை இதுவரை யாராலும் நிரூபிக்க முடியவில்லை என்றும் அவர் கூறினார்.

ஜனவரி 25.. தேசிய வாக்காளர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. நாட்டு மக்கள் தங்களின் வாக்குரிமையை சரியாக பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. வாக்காளர் தங்களது வாக்குரிமையை எந்தவித இடைஞ்சலும் இல்லாமல் நிறைவேற்றும்போது தான் உண்மையான ஜனநாயகம் மலரும்.

இந்தாண்டு இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு தயாராகி வரும் எதிர்க்கட்சிகள் அனைத்துமே குறைகூறுவது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை தான். அதில் மோசடி நடைபெற வாய்ப்பிருப்பதாகவும், அதனால் மீண்டும் வாக்குச்சீட்டு முறையையே அமல்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கின்றன. சமீபத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த சைபர் நிபுணரான சையது சுஜா, இந்தியாவில் கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலின்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்யப்பட்டதாக குற்றம்சாட்டியிருந்தார். இது தேர்தல் ஆணையம் மீது எதிர்க்கட்சிகள் மட்டுமில்லாமல் மக்களுக்கும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை என முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் விஎஸ் சம்பத் தெரிவித்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது தலைமைத் தேர்தல் ஆணையராக பணியாற்றியவர் சம்பத். இவர் வரவிருக்கும் தேர்தல் குறித்து கூறும்போது, “ எந்தவொரு பொதுத் தேர்தல் என்றாலும் தேர்தல் ஆணையத்திற்கு மிகப்பெரிய சவாலான பணிதான். கிட்டத்தட்ட 1 வருட காலம் இதற்காக தயாராக வேண்டும். உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்குவங்க மாநிலங்களில் ஒரு சில சூழ்நிலைகளால் பல கட்டத் தேர்தல் நடத்த வேண்டியிருக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக தேர்தலை நேர்மையாக நடத்துவதே எங்கள் குறிக்கோள்.

வரவிருக்கும் தேர்தல்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்தரங்கள் தான் இனி பயன்படுத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். அவருடைய கருத்தை முழுமனதாக வரவேற்கிறேன். அவரின் முடிவு சரியானதும் கூட.  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்ய முடியும் என்பதை நிரூபிக்க யாராலும் முடியவில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் இருக்கும்போது மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு வாய்ப்பில்லை. அதேமசயம் தேர்தலில் நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்தும் கொள்ளும் விதமாக  ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும்” என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com