“அலகாபாத் கும்பமேளா” - யோகி அரசின் உத்தரவால் 2000 திருமணங்கள் ரத்து?
தனியார் இடங்களில் பக்தர்களை தங்க அனுமதிக்க வேண்டும் என அலகாபாத் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவால் சுமார் 2000 திருமண நிகழ்ச்சிகள் ரத்தாகும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அலகாபாத், நாசிக், உஜ்ஜையினி, ஹரித்துவார் ஆகிய இடங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூரண கும்பமேளா நடைபெறுகிறது. அதைப் போலவே ஹரித்துவார், அலகாபாத்தில் மட்டும் 6 ஆண்டுக்கு ஒருமுறை அரை கும்பமேளா விழாவும் நடைபெறும். அலகாபாத்தில் 2013 ஆம் ஆண்டு பூரண கும்பமேளா நடைபெற்ற நிலையில், அடுத்த ஆண்டு அரை கும்பமேளா நடைபெறவுள்ளது.
இந்த கும்பமேளா நாட்களில் நீர்நிலைகளில் பக்தர்கள் நீராடுவார்கள். நாசிக், உஜ்ஜையினி, ஹரித்துவார் போன்ற இடங்களில் நடக்கும் கும்பமேளா விழாவைவிட அலகாபாத்தில் நடக்கும் விழா விசேஷமானது. அங்குதான் கங்கை, யமுனை, சரஸ்வதி என்ற மூன்று நதிகளும் கூடும் திரிவேணி சங்கமம் நடைபெறுகிறது.
அலகாபாத்தில் அடுத்த ஆண்டு (2019) ஜனவரி 14-ம் நாள் மகர சங்கராந்தி தொடங்கி மார்ச் மாதம் 4-ம் நாள் மகாசிவராத்திரி வரை, 50 நாள்கள் அரை கும்பமேளா விழா நடைபெறும் என அலகாபாத் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே அறிவித்து இருந்தது. இதற்காக 2,500 கோடி ரூபாய் மத்திய - மாநில அரசுகள் ஒதுக்கி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், அலகாபாத் நகரில் உள்ள ஹோட்டல்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட தனியார் இடங்களில் பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், அரை கும்பமேளா நடைபெறும் நாட்களில் நடக்கவுள்ள திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளின் முன் பதிவுகள் ரத்து செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
கும்பமேளாவுக்கு அறைகள் ஒதுக்க வேண்டியுள்ளதாக தனியார் மண்டபங்களில் நடைபெறவிருந்த 2000 திருமண நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்படும் என தெரிகிறது.
இதுகுறித்து அலகாபாத் நகர திருமண மண்டப உரிமையாளர் ஒருவர் கூறுகையில், “இதில் நிறைய திருமணங்கள் ஒரு வருடத்திற்கு முன்பே பல்வேறு குடும்பங்களால் முன்பதிவு செய்யப்பட்டது. முன்பதிவு செய்தவர்கள் எப்படி இந்த நிலையை சமாளிப்பார்கள் என்பது தெரியவில்லை. மேலும், அவர்கள் கொடுத்த முன் பணத்தையும் எப்படி கொடுக்க போகிறோம் என்பது தெரியவில்லை. இதில் ஐந்தில் ஒரு திருமணம் முஸ்லீம்களுடையது” என்றார்.
இதுகுறித்து உத்தரபிரதேச அமைச்சர் நந்த் குமார் நந்தி கூறுகையில், “கும்பமேளா நாட்களில் திருமணம் வைத்திருந்த குடும்பத்தினர் என்னை சந்தித்து, இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதுதொடர்பாக மூத்த அதிகாரிகள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது” என்றார்.
அலகாபாத் மாவட்ட ஆட்சியர் சுஹாஸ் கூறுகையில், “இந்த உத்தரவு அலகாபாத் நகரில் கோடிக்கணக்கான மக்கள் நீராடுவதற்காக கூடும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும். போக்குவரத்து நெரிசல் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
ஆனால், கும்பமேளா நிர்வாகி ஒருவர், “கும்பமேளா நடைபெறும் மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தில் இருந்து சுமார் 20 ச.கிமீ பகுதியில் பக்தர்கள் கூட்டம் இருக்கும். நகரின் இந்த முக்கிய பகுதியில் மட்டும் சுமார் 2000 ஹோட்டல்கள் மற்றும் திருமண மண்டபங்கள் உள்ளன” என்று கூறினார்.