மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு மாறும் அரசின் திட்டம் - பைக் உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு
நாடு முழுவதும் முற்றிலும் மின்சார இரு சக்கர வாகனங்களுக்கு மாறும் அரசின் திட்டத்திற்கு வாகன உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
நாட்டில் ஓடும் இரு சக்கர வாகனங்கள் அனைத்தும் மின்சாரத்தில் இயங்கும் வகையில் இருக்கவேண்டும் என்றும் அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக பெட்ரோலில் ஓடக் கூடிய 150 சிசி திறனுக்குள் உள்ள அனைத்து இரு சக்கர வாகனங்களின் உற்பத்தியையும் நிறுத்த அரசின் திட்டமிடல் அமைப்பான நிதி ஆயோக் முடிவு செய்துள்ளது. இதற்கு 2025ம் ஆண்டை இலக்காக நிர்ணயித்துள்ளது. இதையடுத்து மின்சார வாகனங்களுக்கு முழுமையாக மாறும் திட்டம் குறித்து 2 வாரங்களுக்குள் கருத்து கூறுமாறு உற்பத்தியாளர்களை நிதி ஆயோக் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பஜாஜ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜிவ் பஜாஜ், 100% மின்சார வாகன பயன்பாடு என்பது தேவையற்றது, நடைமுறையில் சாத்தியமற்றது என்று தெரிவித்துள்ளார். தற்போது பெட்ரோலில் ஓடும் வாகன உற்பத்திக்கு முற்றிலும் தடை விதித்து விட்டு முழுமையும் மின்சார வாகன உற்பத்திக்கு மாறுவது ஓட்டுமொத்த வாகன துறையையே கடுமையாக பாதிக்கும் என ஹீரோ மோட்டார் கார்ப் தெரிவித்துள்ளது. எனவே இந்த விஷயத்தில் அரசின் நடவடிக்கைகள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
முழுமையும் மின்சார வாகனத்திற்கு மாறுவது ஆதார் அட்டைக்கு உடனடியாக மாறுவது போன்றது அல்ல என டிவிஎஸ் நிறுவனத்தின் வேணு ஸ்ரீநிவாசன் தெரிவித்துள்ளார். தற்போதுள்ள உற்பத்தி மற்றும் விநியோக நடைமுறையை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.