”தமிழ்நாட்டிற்கு என்ன செய்தோமா?” - திமுக எம்பிக்களுக்கு பட்டியலிட்டு சொன்ன நிர்மலா சீதாராமன்!
பட்ஜெட் விவாதத்துக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை பதில் அளித்தபோது திமுக உறுப்பினர்கள் அவருடன் மோதலில் ஈடுபட்டதால் மாநிலங்களவையில் பரபரப்பு ஏற்பட்டது. திமுகவின் மாநிலங்களவை குழு தலைவரான திருச்சி சிவா மத்திய அரசு தமிழகத்துக்கு என்ன வழங்கி உள்ளது என கேள்வி எழுப்பிய போது, நிர்மலா சீதாராமன் பல்வேறு உதாரணங்களை குறிப்பிட்டு மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அளித்ததாக வலியுறுத்தினார்.
அப்போது திமுகவின் வில்சன், அப்துல்லா மற்றும் கிரிராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மாநிலங்களவையில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. கேள்வி கேட்டுள்ள நீங்கள் அமைதியாக என் பதிலை கவனிக்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் திமுக உறுப்பினர்களை இருக்கையில் அமரும்படி கேட்டுக் கொண்டார்.
நீங்கள் அவையில் எழுப்பிய கேள்விகளுக்கு நான் பதில் அளிக்கும் போது குறிப்பிடுவது சரியல்ல என அவர் பேசினார். காங்கிரஸ் கட்சியுடன் மத்திய அரசில் திமுக கூட்டணியில் இருந்த போது ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது என நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் பேசினார். பிரதமர் நரேந்திர மோடியே அந்த தடையை எப்படி நீக்குவது என யோசனை அளித்து அதற்கு முழு ஆதரவு அளித்து மீண்டும் ஜல்லிக்கட்டு நடைபெற வழி செய்தார் என நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார்.
நான் அவை தலைவரிடம் அனுமதி வாங்கி பேசுகிறேன், உங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் பது நீங்கள் பேசுங்கள் என அவர் குறிப்பிட்டார். மூத்த நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற வகையில் திருச்சி சிவா மீது தனக்கு மதிப்பு உண்டு எனவும் ஆனால் அவர் இந்த விவகாரத்தில் நியாயமாக பேசவில்லை எனவும் நிர்மலா சீதாராமன் விமர்சனம் செய்தார்.
ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்ட போது திமுக கேள்வி கேட்கவில்லை என விமர்சனம் செய்த நிர்மலா சீதாராமன், அப்ப எங்க போனீங்க என தமிழில் வினா எழுப்பினார். அப்போ உங்களுடைய கடமை உணர்வு எங்கே இருந்தது எனவும் குறிப்பிட்டார். திமுக அந்த சமயத்தில் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருந்ததால், விமர்சனங்களை தவிர்த்தது என்பது நிதி அமைச்சர் குற்றச்சாட்டை முன் வைத்தார்.
திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் இந்த கருத்துக்களை எதிர்த்து முழக்கம் எழுப்பிய போது, என்னுடைய பேச்சை அமைதியாக கேட்க வேண்டியது உங்கள் கடமை என நிர்மலா சீதாராமன் தமிழில் தனது நிலைப்பாட்டை வலியுறுத்தினார்.
சென்னை மெட்ரோ திட்டம் குறித்து பேசிய நிர்மலா சீதாராமன், ஆரம்பத்தில் அதை மத்திய அரசு திட்டமாக நடத்தி, மானிய வட்டியில் வெளிநாட்டிலிருந்து கடன் பெறுவதை மத்திய அரசே கையாளும் என முடிவு செய்யப்பட்டிருந்தது எனவும், பின்னர் தமிழ்நாடு அரசே இந்த முடிவை மாற்றியதாகவும் குறிப்பிட்டார். சென்னை மெட்ரோ விரிவாக்கத்திற்கு 63,246 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனவும் இதில் 65% மத்திய அரசின் பங்கு எனவும் அவர் குறிப்பிட்டார். வெளிநாட்டிலிருந்து மானிய வட்டியில் கடன் பெற்று தரும் பொறுப்பை தற்போது மத்திய அரசே கையாளும் என அவர் விளக்கினார்.
மெட்ரோ திட்டத்திற்காக 33,593 கோடி ரூபாய்க்கு மானிய வட்டி கடன் பன்னாட்டு அமைப்புகளிடம் பெற திட்டமிடப்பட்டுள்ள நிலையில், ஜப்பானிலிருந்து இதற்கான கடன் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசு கடனாக 7,425 கோடி ரூபாய் இந்தத் திட்டத்துக்கு வழங்கப்பட உள்ளது. தமிழ்நாட்டில் தான் இந்தியாவின் முதல் பாதுகாப்பு துறைக்கான உற்பத்தி தொழில்பேட்டைகள் திட்டம் தொடங்கப்பட்டது எனவும் இதுவரை 30 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளதாக தகவல் அளிக்கப்பட்டுள்ளது எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
விருதுநகரில் பிஎம் மித்ரா திட்டத்தின் கீழ் ஜவுளி தொழிற்பேட்டை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனவும் நிர்மலா சீதாராமன் மாநிலங்களவையில் பேசினார்.
மதுரை எய்ம்ஸ் திட்டத்தை நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டபோது, திமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் கடுமை எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசை மட்டுமே குறை சொல்வது சரிஅல்ல என நிர்மலா சீதராமன் பதிலடி கொடுத்தார்.
தமிழ்நாட்டில் 4100 கிலோ மீட்டர் நெடுஞ்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் 5 பசுமை வழி தடங்களுக்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
சென்னை விமான நிலையம் விரிவாக்கத்துக்கு 1300 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
பிரதமரின் வீடு கட்டும் திட்டம், குழாய் மூலம் இல்லங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்டம், கழிப்பறை அமைக்கும் திட்டம், ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டம் மற்றும் மலிவு விலை மருந்தகங்கள் ஆகியவை கணிசமான எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளன எனவும் நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டுக்கான மத்திய அரசு திட்டங்களை பட்டியலிட்டார்.
நிதியமைச்சர் பட்ஜெட் விவாதத்துக்கு பதில் அளித்த பிறகு மாநிலங்களவை மார்ச் 10ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது.