‘அரசுக்கும், நீதித்துறைக்கும் நன்றி’ - நிர்பயாவின் தாயார்
நிர்பயாவுக்கு இறுதியாக நியாயம் கிடைத்திருக்கிறது என நிர்பயாவின் தாயார் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி இரவுவேளையில், ஓடும் பேருந்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார், 23 வயதான இளம் மருத்துவ மாணவி. சிங்கப்பூர் வரை அழைத்து சென்று சிகிச்சை அளித்தபோதிலும், அடுத்த 13 நாட்களிலேயே அவரின் உயிர் பிரிந்தது. இவ்வழக்கில் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன்குப்தா, அக்ஷய்குமார், பேருந்து ஓட்டுநர் ராம்சிங், சிறார் ஒருவரையும் சேர்த்து 6 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணை நடந்து கொண்டிருந்தபோதே ஓட்டுநர் ராம்சிங் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். சிறார் கூர்நோக்கு இல்லத்தில் 3 ஆண்டுகள் தண்டனைக்குப்பின், அந்த 16 வயது சிறுவனை நீதிமன்றம் விடுதலை செய்தது.
இதையடுத்து மீதமிருந்த 4 பேருக்கும் தூக்குதண்டனை என்ற அறிவிப்பை 2013 செப்டம்பரில் டெல்லி கீழமை நீதிமன்றம் வழங்கியது. அதனை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. அதன்பின்னர், மேல்முறையீட்டு மனுக்களும், சீராய்வு மனுக்களும் கருணை மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டே வந்தன.
இந்நிலையில், பல்வேறு நகர்வுகளுக்கு பிறகு இன்று காலை 5.37 மணிக்கு குற்றவாளிகள் 4 பேரும் தூக்கிலிடப்பட்டனர். இதுகுறித்து நிர்பயாவின் தாயார் கூறும்போது, நிர்பயாவுக்கு இறுதியாக நியாயம் கிடைத்திருக்கிறது என கண்ணீர் மல்க தெரிவித்தார். மேலும், “என் மகளுக்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த பெண்களுக்கும் நீதி கிடைத்துள்ளது. எனது நாடு நீதியை பெற்றுத் தந்துள்ளது. ஒட்டுமொத்த தேசத்திற்கும் நீதி கிடைத்துள்ளது. அரசுக்கும் நீதித்துறைக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டார்.