வங்கி மோசடி: நிரவ் மோடியின் சொத்துகள் முடக்கம்!
பஞ்சாப் நேஷனல் வங்கியில் நிதி முறைகேட்டில் ஈடுபட்டு தப்பிச் சென்ற தொழிலதிபர் நிரவ் மோடிக்குச் சொந்தமான சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் 12 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் நிரவ் மோடியும் அவரது உறவினர் மெஹுல்
சொக்சியும் வெளிநாட்டுக்கு தப்பிவிட்டனர். அவர்களுக்கு நீதிமன்றம் மூலம் ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரன்ட்
பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நிரவ் மோடிக்குச் சொந்தமான மராட்டிய மாநிலத்திலுள்ள சூரியமின்சக்தி ஆலையும், 134 ஏக்கர் நிலமும்
முடக்கப்பட்டுள்ளன. முன்னதாக தொழிலதிபர் நிரவ் மோடியை உலகில் எங்கு கண்டாலும் கைது செய்ய வசதியாக ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்குமாறு சர்வதேச போலீசை அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டிருந்தது. நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்சிக்கு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்க கோரி இண்டர்போல் அமைப்புக்கு அமலாக்கத்துறையினர் கடிதம் எழுதியுள்ளது.