நிரவ் மோடி விவகாரம் : சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய மனு தள்ளுபடி !
நிரவ் மோடி விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு விசாரணை கோரிய மனுவினை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுவதற்கு முன்னரே அவர், வெளிநாட்டிற்கு தப்பிச்சென்றுவிட்டார். அவ்வாறு சென்ற அவர் இங்கிலாந்தில் இருப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து நிரவ் மோடியின் மோசடி தெரிந்தது அவரது சொத்துகள் முடக்கப்பட்டன. அவர் மீது நடவடிக்கை எடுத்த மத்திய அரசு, அவரது பாஸ்போர்ட்டை முடக்கியது.
ஆனாலும் அவர் போலி பாஸ்போர்ட்கள் மூலம் பல நாடுகள் பறந்தார். குறிப்பாக நிரவ் மோடி சிங்கப்பூர் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி பயணிப்பதாக கூறப்பட்டது. இதற்கிடையே நிரவ் மோடி செய்த பண மோசடி விவகாரம் சிறப்பு புலனாய்வு விசாரணை வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் எம்.எல்.சர்மா பொதுநல மனு தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில் பிரதமர் அலுவலகம், மத்திய நிதியமைச்சகம் ஆகியவற்றிற்கு தொடர்பிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஷ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது பதிலளித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால், நீரவ் மோடி விவகாரம் தொடர்பாக ஏற்கனவே குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும் எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாத இது போன்ற பொதுநல வழக்குகளால், அதன் மாண்பே கெட்டுபோவதாகவும் கடிந்தனர்.